Published : 05 Sep 2025 05:53 PM
Last Updated : 05 Sep 2025 05:53 PM
வாஷிங்டன்: “இந்தியாவையும், ரஷ்யாவையும் இருண்ட சீனாவிடம் நாம் இழந்துவிட்டோம்.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம் இந்தியாவையம் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்ததுபோல் தெரிகிறது. (எனினும்) அவர்கள், ஒன்றாக நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தைப் பெறட்டும்!” என்று தெரிவித்துள்ளார். மேலும், நரேந்திர மோடி, விளாடிமிர் புதின், ஜி ஜின்பிங் ஆகியோர் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்ட ட்ரூத் சமூக ஊடக பதிவில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆகியோருடன் இணைந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்துள்ளார்” என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சீன செய்தித் தொடர்பாளர், “பிற நாடுகளுடனான சீனாவின் ராஜதந்திர உறவு என்பது மூன்றாம் தரப்புக்கு எதிரான நோக்கம் கொண்டதல்ல.” என அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் உயர்மட்ட வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ, “இந்திய, சீன, ரஷ்ய தலைவர்களுக்கு இடையேயான நட்புறவு ஒரு தொந்தரவு. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் இருக்க வேண்டும், ரஷ்யாவுடன் அல்ல.” என தெரிவித்திருந்தார்.
டொனால்டு ட்ரம்ப்பின் சமூக ஊடக பதிவு குறித்து கருத்து தெரிவிக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டது. அதேநேரத்தில், பீட்டர் நவரோவின் தவறான கருத்துகளை அறிந்தோம். அவற்றை வெளிப்படையாக நிராகரிக்கிறோம் என்று வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT