Published : 05 Sep 2025 06:57 AM
Last Updated : 05 Sep 2025 06:57 AM
பெய்ஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். கடந்த 1-ம் தேதி எஸ்சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் ஹோட்டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.
இந்த சூழலில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த 3-ம் தேதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் காரில் பேசியது என்ன என்று நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு புதின் பதில் அளித்தபோது, “உக்ரைன் போர் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினேன். இது தொடர்பான விவரங்களை பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டேன்" என்றார்.
அதிபர் புதின் மேலும் கூறியதாவது: இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை நெருங்கிய கூட்டாளிகள். இந்த 3 நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். எங்களது பொருளாதாரம் மிகவும் வலுவாக இருக்கிறது. எங்களை யாராலும் மிரட்ட முடியாது, தண்டிக்கவும் முடியாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தனது நட்பு நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிக்கக்கூடாது. மிரட்டும் தொனியில் பேசக்கூடாது. வரிவிதிப்பு மூலம் இந்தியா, சீனாவை யாராலும் மிரட்ட முடியாது. அதிபர் ட்ரம்பின் சொல்லுக்கு இந்திய, சீன தலைவர்கள் கட்டுப்பட மாட்டார்கள்.
ரஷ்யா, உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் இந்த போர் நடைபெறவில்லை. கிரிமியா, டோன்ஸ்க், லுகான்ஸ்க், கேர்சன் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். ரஷ்யாவுடன் இணைய அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். அந்த பகுதி மக்களின் விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இதுதான் ஜனநாயகம்.
உக்ரைன் போர் தொடர்பாக ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருண்ட குகையில் கடைசியில் வெளிச்சம் தெரிவது போன்று தெரிகிறது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாஸ்கோவுக்கு வரலாம். அவரை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது நிலங்களை பறிமாற்றம் செய்வது தொடர்பாக எதுவும் பேசவில்லை. போர் தொடர்பான முக்கிய விவகாரங்கள் குறித்து மட்டுமே பேசினோம். உக்ரைனுடன் சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால் ரஷ்யா தொடர்ந்து ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு புதின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT