Published : 05 Sep 2025 06:50 AM
Last Updated : 05 Sep 2025 06:50 AM
வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்ததை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக கொள்கையில் பரஸ்பர வரிவதிப்பு முறை கொண்டுவரப்பட்டது. இந்த புதிய வர்த்தக கொள்கையை ஏற்கும்படி ஐரோப்பிய யூனியன், ஜப்பான் மற்றும் இதர நாடுகளை அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தினார். இதன் காரணமாக அமெரிக்காவின் வரி வருவாய் கடந்த ஆகஸ்ட்டில் 159 பில்லியன் டாலராக உயர்ந்தது. இது கடந்தாண்டு இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட வரியை விட இரண்டு மடங்குக்கு மேல் அதிகம்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கு அபராதமாக இறக்குமதி வரி மிக அதிகளவில் உயர்த்தப்பட்டது. இதனால் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்தது.
இந்த வரிவிதிப்பு முறையை எதிர்த்து அமெரிக்காவின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது, இதை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், வெளிநாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிபர் ட்ரம்ப் அதிகரித்தது சட்டவிரோதம் என கூறியது. இதை எதிர்த்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வோம் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்.
அதன்படி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் மனுத்தாக்கல் செய்துள்ளது. அதில், ‘‘அமெரிக்க அதிபர் வர்த்தக கொள்கை குறித்து கடந்த 5 மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி, புதிய வரிவிதிப்பு முறையை கொண்டு வந்துள்ளார். இது வரி விதிப்பு நடைமுறையில் ஒழுங்கை ஏற்படுத்த உதவியது. இதை சட்டவிரோதம் என அமெரிக்க மேல் முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த முடிவு வெளிநாடுகளுடன் அதிபர் மேற்கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வரி விதிப்பு பாதிக்கப்பட்டால், ஏற்கெனவே வசூலித்த இறக்குமதி வரிகளை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும். இது அமெரிக்காவுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தும். அதனால், அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அதிபர் ட்ரம்ப் கொண்டுவந்த வரி விதிப்பு சட்டவிரோதம் என மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரித்து ரத்து செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT