Last Updated : 04 Sep, 2025 11:39 PM

 

Published : 04 Sep 2025 11:39 PM
Last Updated : 04 Sep 2025 11:39 PM

நேபாளத்தில் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை: காரணம் என்ன?

காத்மாண்டு: நேபாள நாட்டில் வியாழக்கிழமை முதல் ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்துள்ளது அந்நாட்டின் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு.

நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்ய 7 நாட்கள் காலக்கெடு வழங்கியது நேபாள அரசு. அந்த கெடு முடிந்த நிலையில் 4-ம் தேதி அன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போது எக்ஸ், ஃபேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

பேச்சுரிமைக்கு தடை: நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பேச்சுரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் குரலை ஒடுக்கும் நடவடிக்கை இது என்று அவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சமூக வலைதள நிறுவனங்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க தவறியதற்கு அரசின் கடுமையான நிபந்தனைகள் கூட காரணமாக இருந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் உயிரிழந்தனர். இப்போது அங்கு நடக்கும் ஆட்சியை பார்த்து முன்பு இருந்த மன்னராட்சியே மேல் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளதாக தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x