Published : 03 Sep 2025 04:11 PM
Last Updated : 03 Sep 2025 04:11 PM
பெய்ஜிங்: அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருப்பதாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80-ம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2015-க்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா ராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய பேரணியில் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், இதில் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன ராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
மறைந்த சீன தலைவர் மா(வோ) சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு வெற்றிப் பேரணியில் உரையாற்றிய அதிபர் ஜி ஜின்பிங், "இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல், வெற்றியா முழுமையான இழப்பா என்ற தேர்வையும் எதிர்கொள்கிறது. சீன மக்கள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள்.” என தெரிவித்தார்.
அணிவகுப்பு தொடங்கியவுடன் ட்ரூத் சமூக ஊடகத்தில் தனது கருத்தை பதிவிட்ட டொனால்ட் ட்ரம்ப், “சீனா ஜப்பானிடமிருந்து சுதந்திரத்தைப் பெற அமெரிக்கா உதவியதை சுட்டிக்காட்டினார். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புதின், கிம் ஜோங் உன்னுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவியுங்கள்.” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சீனாவின் வெற்றிப் பேரணி தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், இந்த அணிவகுப்பை அமெரிக்காவுக்கான சவாலாக நான் பார்க்கவில்லை என்றும் ஜி ஜின்பிங்குடன் மிகச் சிறந்த உறவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT