Last Updated : 03 Sep, 2025 01:08 PM

2  

Published : 03 Sep 2025 01:08 PM
Last Updated : 03 Sep 2025 01:08 PM

இந்தியா மீதான இறக்குமதி வரி மறுபரிசீலனையா: ட்ரம்ப் சொல்வது என்ன?

வாஷிங்டன்: இந்தியப் பொருட்களுக்கான 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருவதாக வெளியாகும் செய்திகள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.” என்று கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் நன்றாகப் பழகுகிறோம். ஆனால், அந்தப் பழக்கம் நீண்ட காலமாக ஒருதலைபட்சமாகவே இருந்து வருகிறது.

இந்தியா எங்களிடம் மிகப்பெரியளவில் வரி வசூலிக்கிறது. இந்தியா தான் எங்களுடன் வியாபாரம் செய்கிறது. நாங்கள் அவர்களுடன் வியாபாரம் செய்யவில்லை. அவர்கள் தயாரித்த பொருட்களை இங்கே அனுப்பி 100% வரி விதிக்கிறார்கள். நாங்கள் அவர்களின் பொருட்களுக்கு முட்டாள்தனமாக வரி விதிக்கவில்லை. இது தொடர்ந்தால், நாங்கள் எந்தப் பொருளையும் அங்கே அனுப்ப மாட்டோம். வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிக வரியை இந்தியா எங்களிடம் வசூலிக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக நாங்கள் இருக்கிறோம். ஆனால் அங்கு நாங்கள் மிகக் குறைந்த அளவில் பொருட்களை வியாபாரம் செய்கிறோம். இது முழுக்க முழுக்க ஒருதலைபட்சமானது. இந்தப் பேரழிவு பல தசாப்தங்களாக தொடர்கிறது.

மேலும், கச்சா எண்ணெய், ஆயுதங்களையும் ஒப்பீட்டளவில் ரஷ்யாவிடம் தான் அதிகம் வாங்குகிறது. இப்போது என்னவென்றால் அமெரிக்க பொருட்களுக்கான வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வருகிறது. ஆனால் இது காலம் கடந்த செயல்.” என்றார்.

அண்மையில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முன் எப்போதும் இல்லாத அளவிலான இணக்கத்தைக் காட்டினர். இதற்கு ட்ரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவேரா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

3 பேரின் சந்திப்பு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரான பிரதமர் மோடி, உலகின் 2 மிகப்பெரும் சர்வாதிகாரிகளான புதின், ஜின்பிங்குடன் ஒன்றாகக் காணப்பட்டது வெட்கக் கேடானது. அர்த்தமற்றது.” என்று கூறியிருந்தார். இந்நிலையில் ட்ரம்ப், இந்தியா மீதான வரி விதிப்பு மறு பரிசீலனை செய்யப்படுமா என்பதற்கு சூசகமாக பதிலளித்துள்ளார்.

வரி விதிப்பும் தாக்கமும்: அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில்துறைகடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x