Published : 02 Sep 2025 07:16 PM
Last Updated : 02 Sep 2025 07:16 PM
உலகில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
உலக மக்களின் மனநலம் இன்று, மனநலம் வரைபடம் 2024 ஆகிய தலைப்புகளில் உலக சுகாதார அமைப்பு 2 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு புதிய தரவுகள் குறித்த விவரம்: உலக அளவில் நிகழும் மனித உயிரிழப்புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்கிறது. 2021-ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம். 20 தற்கொலை முயற்சிகளில் ஒன்று தற்கொலையாக மாறுகிறது.
உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனநலக் கோளாறுகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். பதற்றமும் மனச்சோர்வும் பொதுவமான மனநலக் கோளாறுகளாக உள்ளன. இவை, 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட அனைத்து மனநலக் கோளாறுகளிலும் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இருந்தன. மனநல பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.
2011 முதல் மதிப்பிடப்பட்ட தரவுகளில் 20-29 வயதுக்கு உட்பட்டவர்களிடம் மனநல பாதிப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கவனக்குறைவு, அதிக செயல்பாட்டுக் கோளாறு, ஆட்டிசம் கோளாறு, அறிவு வளர்ச்சியில் கோளாறு ஆகிய குறைபாடுகள் பொதுவாக ஆண்களுக்கு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதற்றம், மனச்சோர்வு, உணவுக் கோளாறு ஆகியவை பெண்களுக்கான பொதுவமான மனநலப் பிரச்சினையாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மனநலக்கோளாறுகளில் முதலில் பதற்றம் ஏற்படுகிறது. பின்னர் அது மனச்சோர்வாக மாறுகிறது. 40 வயதுக்குப் பிறகு பதற்றத்தைவிட மனச்சோர்வுதான் அதிகமாக காணப்படுகிறது. 50 வயது முதல் 59 வயது வரை அது உச்சத்தை அடைகிறது.
அனைத்து நாடுகளிலும், அனைத்து சமூக - பொருளாதார சூழல்களிலும் இளைஞர்களின் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக தற்கொலைதான் உள்ளது. தற்கொலை விகித்ததைக் குறைக்க உலக சுாதார அமைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டுக்குள், தற்போதைய தற்கொலை விகிதத்தில் 3-ல் 1 பங்கை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், இதை அடைவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அந்த காலக்கெடுவுக்குள் 12% மட்டுமே அடையமுடியும்.
போதுமான நிதி, வலுவான தலைமைத்துவம், ஏற்கெனவே உள்ள திட்டங்களை திறம்பட செயல்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளே தேவையாக இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT