Last Updated : 02 Sep, 2025 05:28 PM

2  

Published : 02 Sep 2025 05:28 PM
Last Updated : 02 Sep 2025 05:28 PM

ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை: புதின்

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ உடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 

தியான்ஜின்: ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை என தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அதேநேரத்தில் அது நேட்டோவில் இணைவதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோவை, விளாடிமிர் புதின் சீன தலைநகர் பெய்ஜிங்கில் சந்தித்துப் பேசினார். ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்லோவாகியா, ரஷ்யா உடன் நட்பு பாராட்டி வருகிறது. மாஸ்கோவில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் வெற்றி தின அணிவகுப்பிலும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டிலும் பங்கேற்ற ஒரே ஐரோப்பிய ஒன்றிய நாடாக ஸ்லோவாகியா உள்ளது.

இதனால், தான் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் குறித்து ராபர்ட் ஃபிகோ, புதினிடம் எடுத்துரைத்தார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஸ்லோவாகியா உறுதியுடன் நிற்பதாகத் தெரிவித்த ஃபிகோ, அதேநேரத்தில் அது எடுக்கும் சில முடிவுகள் புரிந்து கொள்ள முடியாததாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ராபர்ட் ஃபிகோ, "ரஷ்யா உடனான பொருளாதார உறவுகளை இயல்பாக்க நாங்கள் விரும்புகிறோம். ரஷ்யாவில் இருந்து ஸ்லோவாக்கியா மற்றும் ஹங்கேரிக்குச் செல்லும் எரிவாயு உள்கட்டமைப்பு மீதான உக்ரைனின் தாக்குதல் கண்டிக்கத்தக்கவை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு பார்வை உண்டு. ஸ்லோவாக்கியாவைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முன் அதற்கான அனைத்து நிபந்தனைகளையும் உக்ரைன் பூர்த்தி செய்ய வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான அளவுகோள்கள், அரசியல் அளவுகோள்களைவிட குறைந்தது அல்ல.” என தெரிவித்தார்.

அப்போது பேசிய விளாடிமிர் புதின், “ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரு உறுப்பு நாடாக உக்ரைன் இணைவதை ரஷ்யா ஒருபோதும் எதிர்த்ததில்லை. அதேநேரத்தில், நேட்டோவில் இணைவதற்கு அது பொருந்தாது. முழு சோவியத் யூனியனுக்குப் பிந்தைய பகுதிகளை ஐரோப்பிய யூனியன் உள்வாங்க விரும்புகிறது. எனவே, ரஷ்யா தனது நலன்களைப் பாதுகாக்க வேண்டும். நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராவதை ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்லோவாக்கியா பிரதமராக நீங்களும், உங்கள் குழுவும், உங்கள் அரசாங்கமும் பின்பற்றும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ரஷ்யா மதிக்கிறது.” என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x