Published : 02 Sep 2025 08:51 AM
Last Updated : 02 Sep 2025 08:51 AM
காபூல்: ஆப்கானிஸ்தானில் இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகி உள்ளன. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் குணார் மாகாணம் ஜலாலாபாத் அருகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஆப்கனின் கிராமங்கள், பல மாடி கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
ஜலாலாபாத்துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்தில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குணார் மாகாணத்தின் நூர் கால், சாவ்கி, வாட்பூர், மனோகி மற்றும் சபா தாரா பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் நொறுங்கியதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் முதல் நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சில நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பான சிசிடிவி காட்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நிலநடுக்கத்தில் பல கிராமங்கள் இருந்த வீடுகள், பல மாடி கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக சரிந்துள்ளன. இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல கிராமங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அதனால் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. குணார், நங்கார்ஹர், தலைநகர் காபூல் போன்ற நகரங்களில் இருந்து மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர் என்று பொது சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஷராபத் ஸமான் கூறினார். ஆப்கானிஸ்தான் வரலாற்றில் இந்த நிலநடுக்கம் மிக மோசமானது என்று கூறுகின்றனர்.
பிரதமர் மோடி இரங்கல்: ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அறிந்து பிரதமர் மோடி மிகுந்த வேதனை தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆப்கன் நிலநடுக்கத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் சோகம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்த நேரத்தில் உறுதுணையாக இருப்போம். அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இந்தியா செய்வதற்கு தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT