Published : 02 Sep 2025 08:24 AM
Last Updated : 02 Sep 2025 08:24 AM
தியான்ஜின்: சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், இந்தியா - ரஷ்யா இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடியும் புதினும் ஒரே காரில் பயணித்து கூட்டம் நடைபெறும் அரங்குக்கு சென்றுள்ளனர்.
ரஷ்ய அதிபரின் இந்த சொகுசு காரின் பெயர் அவுரஸ் செனட் என்று அழைக்கப்படுகிறது. அதிநவீன சொகுசு காரான இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் பயன்படுத்தி வருகிறார். இந்த கார் ஃபோர்ட்ரஸ் ஆன் வீல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அதாவது நகரும் கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த வகை அதிநவீன சொகுசு காரை ரஷ்யாவைச் சேர்ந்த அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஷ்யாவின் என்ஏஎம்ஐ, சோலர்ஸ் ஜேஎஸ்சி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டவாசுன் ஹோல்டிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை நடத்துகின்றன. ரஷ்ய அதிபரின் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு பாதுகாப்பு வசதிகள் இதில் செய்யப்பட்டுள்ளன.
2021-ல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த அவுரஸ் செனட் காரை, விளாடிமிர் புதின் அப்போதிருந்தே பயன்படுத்தி வருகிறார். வெளியே பார்ப்பதற்கு சொகுசு கார் போல தோற்றமளிக்கும் இந்த கார், இரும்புக் கோட்டை போன்றது. அதிநவீன கருவிகள், வெளியேயிருந்து யாராவது தாக்கும்போது அதைத் தடுப்பதற்கான வசதிகள், குண்டு துளைக்காத கண்ணாடிகள், ராக்கெட் துளைக்காத கவச வாகனம் போன்ற சிறப்புகள் இதற்கு உண்டு. இதுபோன்ற காரை அவுரஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு 2024-ம் ஆண்டு வழங்கப்பட்டது.
இதுவரை 120 கார்கள் மட்டுமே இந்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. 1.8 கோடி ரூபிள்(ரஷ்ய கரன்சி) விலை கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT