Published : 01 Sep 2025 10:37 PM
Last Updated : 01 Sep 2025 10:37 PM
வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வந்துள்ளது. இருந்தாலும் இது காலம் கடந்த தாமதமான முடிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் ஞாயிற்றுக்கிழமை அன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். தொடர்ந்து திங்கட்கிழமை அன்று ரஷ்ய அதிபர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சூழலில் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியாவின் வரி விதிப்பு குறித்து பதிவிட்டுள்ளார்.
“இந்தியா இப்போது இறக்குமதி வரியை பூஜ்ஜியம் என்ற வகையில் குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால், இது மிக தாமதமான ஒன்று. இதை பல ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் செய்திருக்க வேண்டும்.
இதுநாள் வரை இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு ஒருதலைப்பட்சமாக இருந்தது. பல தசாப்தங்களாக இது தொடர்ந்தது. மற்ற நாடுகளை விட அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை இந்தியா வசூலித்தது. அது அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பு ஒருதலைபட்சமாக இருந்தது.
மேலும், எண்ணெய் மற்றும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகமாகவும், அமெரிக்காவிடம் குறைவாகவும் இந்தியா வாங்குகிறது” என அந்த பதிவில் ட்ரம்ப் கூறியிருந்தார்.
பரஸ்பர வரிவிதிப்பு: அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரிவிதிப்புக் கொள்கையை அமெரிக்கா கடை பிடிக்கும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். கனடா, மெக்சிகோ உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடும் இறக்குமதி வரிகளை விதித்துள்ளார். தனது இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா மீதான வரியை ட்ரம்ப் பல மடங்கு உயர்த்தினார். பின்னர், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரி விகிதத்தை குறைத்தார்.
இந்தியாவுக்கு 50% வரி: அதேபோல, இந்தியப் பொருட்களுக்கு ஏற்கெனவே 25 சதவீத வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, கூடுதலாக 25 சதவீதம் வரியை விதித்து, இந்தியாவுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், இந்தியாவில் தொழில்துறைகடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. தமிழகத்திலும் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள், ரத்தினக் கற்கள், தோல் காலணிகள், கடல் பொருட்கள், ரசாயனங்கள் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT