Last Updated : 01 Sep, 2025 05:38 PM

1  

Published : 01 Sep 2025 05:38 PM
Last Updated : 01 Sep 2025 05:38 PM

உக்ரைன் உடனான மோதலை விரைவில் முடிவுக்கு வர புதினிடம் மோடி வலியுறுத்தல்

தியான்ஜின்: உக்ரைன் உடனான மோதல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்பட வேண்டும், அமைதி நிலைநாட்டப்பட வேண்டும், இது ஒட்டுமொத்த மனித நேயத்தின் அழைப்பு என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை இன்று (01.09.2025) சந்தித்துப் பேசினார். இதற்காக இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒரே காரில் பயணித்தனர். இந்த சந்திப்பின்போது, பொருளாதாரம், நிதி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இத்துறைகளில் இருதரப்பு உறவுகளில் நீடித்த வளர்ச்சி நிகழ்வது குறித்து, அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.

மிகவும் கடினமான காலங்கள் உட்பட அனைத்து காலங்களிலும் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்பட்டு வருகின்றன என தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா உறவு இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாது, உலகின் அமைதி, நிலைத்தன்மை, வளம் ஆகியவற்றுக்கும் மிகவும் முக்கியமானது என கூறினார்.

உக்ரைன் குறித்த சமீபத்திய நிகழ்வுகள் உள்ளிட்ட உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உக்ரைனில் நிலவும் மோதல்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய முயற்சிகளுக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்தார். மேலும், மோதலை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து நீடித்த அமைதியை நிலவச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"உக்ரைனில் நிகழ்ந்து வரும் மோதல் குறித்து நாம் தொடர்ந்து விவாதித்து வருகிறோம். அமைதியை ஏற்படுத்துவதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். ஆக்கப்பூர்வமான முறையில் அனைத்துத் தரப்பும் முன்னேறும் என நாங்கள் நம்புகிறோம். கூடிய விரைவில் மோதலை முடிவுக்கு வருவதற்கான பாதையை கண்டறிய வேண்டும். அதன்மூலம் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இது ஒட்டுமொத்த மனிதத்தின் அழைப்பு.

உங்களுடனான (புதின்) சந்திப்பு எப்போதும் நினைவில் கொள்ளத்தக்கதாக எனக்கு இருக்கிறது. பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம். நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். இரு பக்கத்திலும் ஏராளமான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன.

வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா - ரஷ்யா 23ம் ஆண்டு இருதரப்பு உச்சி மாநாட்டுக்கு நீங்கள் (புதின்) வருவதை 140 மக்களும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் ஆழமான, விரிவான, சிறப்பான நட்புறவை இந்த சந்திப்பு உணர்த்துகிறது" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x