Published : 01 Sep 2025 01:14 PM
Last Updated : 01 Sep 2025 01:14 PM
தியான்ஜின்: பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
எஸ்சிஓ உச்சிமாநாட்டில் உரை நிகழ்த்திய சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்தார். அவர் தனது உரையில், "இரண்டாம் உலகப் போர் குறித்த சரியான வரலாற்றுக் கண்ணோட்டத்தை நாம் ஊக்குவிக்க வேண்டும். பனிப்போர் மனநிலை, பிராந்திய மோதல், மிரட்டல் நடைமுறை ஆகியவற்றை எதிர்க்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
பரஸ்பர வரி விதிப்பு முறை என்ற பெயரில், இந்தியா, பிரேசில் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான இறக்குமதி வரிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 25% கூடுதல் வரியை விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% வரியை விதித்தார். ட்ரம்ப்பின் இத்தகைய நடவடிக்கைகள், இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த பின்னணியில், ஜி ஜின்பிங்கின் உரை அதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
மேலும், ஜி ஜின்பிங் தனது உரையில், “ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்புகளைப் பாதுகாக்க வேண்டும். உலக வர்த்தக மையத்தின் மிக முக்கிய நோக்கத்துக்கு இணங்க, பலதரப்பு வர்த்தக அமைப்பை ஆதரிக்க வேண்டும்.
உறுப்பு நாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து வெற்றி பெற வேண்டும். வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு பொதுவான நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், வேறுபாடுகளை மதிக்கவும், தகவல் தொடர்புகளை பராமரிக்கவும், ஒருமித்த கருத்தை உருவாக்கவும், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்.
எஸ்சிஓ உடன் உள்ள 26 நாடுகளின் மொத்த பொருளாதார உற்பத்தி கிட்டத்தட்ட 30 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது. இந்த ஆண்டுக்குள் 2 பில்லியன் யுவான் (சுமார் 281 மில்லியன் அமெரிக்க டாலர்) மானியங்கள் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்படும். மேலும், அடுத்த 3 ஆண்டுகளில் 10 பில்லியன் யுவான் உறுப்பு நாடுகளுக்கு கடனாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT