Last Updated : 01 Sep, 2025 12:40 PM

6  

Published : 01 Sep 2025 12:40 PM
Last Updated : 01 Sep 2025 12:40 PM

ஷாங்காய் மாநாட்டுக்குப் பின் புதினுடன் ஒரே காரில் சென்ற பிரதமர் மோடி

தியான்ஜின்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரே காரில் சென்ற நிகழ்வு கவனம் பெற்றுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியாஞின் நகரில் நடந்தது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து ரஷ்யா - இந்தியா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு இருவரும் ஒன்றாக காரில் சென்றனர். அது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மோடி, “இந்திய - ரஷ்ய இருதரப்பு ஆலோசனைக்காக நானும், புதினும் ஒரே காரில் பயணிக்கிறோம். அவருடனான ஆலோசனைகள் எப்போதுமே ஆழமான புரிதலைக் கொண்டவை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்தது. அதற்கு ரஷ்யாவுடனான நட்பை, அங்கிருந்து இந்தியா அதிகளவு கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக் காட்டியது. இந்நிலையில், ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘ஹாங்கி எல்-5’ சொகுசு கார்: ஏற்கெனவே, சீன அதிபர் ஜி ஜின்பிங், ‘ஹாங்கி எல்-5’ என்ற அதிநவீன சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார். இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா வந்துள்ள பிரதமர் மோடியின் பயணத்துக்கு சீன அதிபர் பயன்படுத்தும் ‘ஹாங்கி எல்-5’ கார் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் உட்பட 20-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில், மோடியின் பயணத்துக்கு மட்டுமே சீன அதிபரின் கார் வழங்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x