Last Updated : 31 Aug, 2025 07:30 PM

 

Published : 31 Aug 2025 07:30 PM
Last Updated : 31 Aug 2025 07:30 PM

எஸ்சிஓ உச்சிமாநாடு: பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தியான்ஜின்(சீனா): ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே நேபாள பிரதமர் கே.பி. ஒளி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) இரண்டுநாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று தியான்ஜின் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழு உறுப்பினர் காய் குய் உள்ளிட்டோரை பிரமதர் மோடி சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், எஸ்சிஓ உச்சிமாநாட்டுக்கு இடையே மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளித்தல், கிழக்கு நோக்கிய கொள்கை, இந்தோ-பசிபிக் கொள்கைகள் ஆகிய இந்திய கொள்கைகளின் ஒரு பகுதியாக, மியான்மருடனான உறவுகளுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

மியான்மர் பாதுகாப்பு மற்றும் அமைதி ஆணைய தலைவர் மூத்த ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலைங்குடன் பிரதமர் மோடி

இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளை மதிப்பாய்வு செய்து, வளர்ச்சி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, எல்லை மேலாண்மை, எல்லை வர்த்தக பிரச்சினைகள் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் பல அம்சங்கள் குறித்து விவாதித்தனர். தற்போதைய போக்குவரத்து இணைப்புத் திட்டங்களின் முன்னேற்றம் இரு நாட்டு மக்களிடையே அதிக தொடர்புகளை வளர்க்கும் என்றும், இந்தியாவின் கிழக்கு நோக்கிச் செயல்படுதல் என்ற கொள்கையின்படி பிராந்திய ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் இது ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் கூறினார்.

மியான்மரில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நியாயமான முறையில் நடத்தப்படும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். மியான்மரின் அமைதி நடைமுறைகளை இந்தியா ஆதரிக்கிறது என்றும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மட்டுமே ஒரே தீர்வு என்றும் அவர் கூறினார். மியான்மரின் வளர்ச்சிக்கான தேவைகளை ஆதரிக்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதியளித்தார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எஸ்சிஓ உச்சிமாநாட்டின் இடையே, நேபாள பிரதமர் கே.பி. ஒளி சர்மா, மாலத்தீவு அதிபர் மொகம்மது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ, தஜிகிஸ்தான் அதிபர் இமாமலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் டொகாயேவ், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், லாவோ அதிபர் தோங்லோன், துருக்மெனிஸ்தான் அதிபர் செர்தார் பெர்டிமுகம்மது, அர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யான் உள்ளிட்டோரைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x