Published : 30 Aug 2025 01:30 AM
Last Updated : 30 Aug 2025 01:30 AM

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் உக்ரைனின் மிகப் பெரிய போர்க்கப்பல் மூழ்கியது

மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிலையங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வந்த ரஷ்யா, தற்போது உக்ரைன் போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே பலவகையான ட்ரோன்களின் தயாரிப்பை ரஷ்யா தீவிரப்படுத்தியது. போர்க்கப்பல்களை தாக்குவதற்காக ‘ஷீ ட்ரோன்களை’ தயாரித்தது. தற்போது இதன் மூலம் முதல் முறையாக தாக்குதலை தொடங்கியுள்ளது. ரிமோட் மூலம் தண்ணீரில் படகு போல் செல்லும் இந்த ட்ரோன், போர்க் கப்பல்களை தாக்கி மூழ்கடிக்கும் திறன் வாய்ந்தது.

உக்ரைன் கடற்படையில் மிகப் பெரிய போர்க்கப்பலாக ‘சிம்ஃபெரோபோல்’ இருந்தது. இது கடந்த 2021-ம் ஆண்டு உக்ரைன் கடற்படையில் இணைக்கப்பட்டது. லகுனா ரக போர்க்கப் பலான இதில் ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிக்கல் வேவு கருவிகள் இருந்தன. இந்தக் கப்பல் டனுபே ஆற்றை கடந்து சென்றபோது, அதன் மீது ரஷ்யா, ‘ஷீ ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் போர்க்கப்பல் சிம்ஃபெரோபோல் வெடித்து சிதறியது. உக்ரைன் போர்க்கப்பலை, ஷீ ட்ரோன் மூலம் ரஷ்யா வெற்றிகரமாக தாக்கியது இதுவே முதல் முறை.

இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர் ஒருவர் உயிரிழந்தார், பலர் காயம் அடைந்தனர். காணாமல் போன வீரர்களை தேடும் பணி நடைபெறுவதாக உக்ரைன் கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தக் கப்பல் மூழ் கடிக்கப்பட்டதாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x