Last Updated : 29 Aug, 2025 06:49 PM

 

Published : 29 Aug 2025 06:49 PM
Last Updated : 29 Aug 2025 06:49 PM

இந்தியா - ஜப்பான் இடையே மனிதவள பரிமாற்ற செயல் திட்டம்: டோக்கியோவில் பிரதமர் மோடி விவரிப்பு

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா உடன் பிரதமர் நரேந்திர மோடி

டோக்கியோ: வலுவான ஜனநாயக நாடுகள் சிறந்த உலகை வடிவமைப்பதில் இயற்கையான பங்காளிகள் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உலகின் அமைதி, நிலைத்தன்மைக்கு இந்திய - ஜப்பான் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டோக்கியோவில் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, "பிரதமர் இஷிபா உடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தது. உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களாகவும், துடிப்பான ஜனநாயக நாடுகளாகவும் உள்ள இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான கூட்டாண்மை இரு நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிக முக்கியமானது. இதில், நாங்கள் இருவரும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளோம். சிறந்த உலகை வடிவமைப்பதில் வலுவான ஜனநாயக நாடுகள் இயற்கையான பங்காளிகள்.

இந்தியா - ஜப்பான் சிறப்பு உத்திகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்துக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி உள்ளோம். அடுத்த 10 ஆண்டுகளுக்கான திட்டங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். முதலீடு, புதுமை, பொருளாதார பாதுகாப்பு, சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், சுகாதாரம், மக்களுக்கு இடையேயான நட்புறவு, அரசுகளுக்கு இடையேயான கூட்டாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

அடுத்த 10 ஆண்டுகளில், ஜப்பான் இந்தியாவில் 10 ட்ரில்லியன் யென் (ஜப்பான் நாணயம்) முதலீடு செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இந்தியா மற்றும் ஜப்பானின் சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

உயர் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது இரு நாடுகளுக்கும் முன்னுரிமையான விஷயமாக உள்ளது. டிஜிட்டல் கூட்டாண்மை, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பானிய தொழில்நுட்பமும் இந்திய திறமையும் ஒரு வெற்றிகரமான கலவை என்று நாங்கள் நம்புகிறோம். அதிவேக ரயில் கட்டமைப்பில் இணைந்துள்ள நாங்கள், அடுத்ததாக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, கப்பல் கட்டுமானம் போன்ற துறைகளிலும் விரைவான முன்னேற்றத்தை அடைவோம்.

மனிதவள பரிமாற்றத்துக்கான செயல் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இரு தரப்பில் இருந்தும் 5 லட்சம் பேர் பரிமாற்றம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள். இதில், 50 ஆயிரம் திறமையான இந்தியர்கள் ஜப்பானின் பொருளாதாரத்துக்காக தீவிரமாக பங்களிப்பார்கள். இந்தியாவும் ஜப்பானும் சுதந்திரமான, திறந்த, அமைதியான, வளமான, விதிகள் சார்ந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்துக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளன.

பயங்கரவாதம் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு இடையே பொதுவான கவலைகள் உள்ளன. இரு நாடுகளின் பொதுவான நலன்கள், பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை மற்றும் புதுமை துறையில் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்தியா, ஜப்பான் கூட்டாண்மை பரஸ்பர நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. உலகத்துக்கான அமைதி, முன்னேற்றம், செழிப்பு குறித்த பொதுவான கனவை நாங்கள் சுமந்து செல்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x