Last Updated : 29 Aug, 2025 02:25 PM

20  

Published : 29 Aug 2025 02:25 PM
Last Updated : 29 Aug 2025 02:25 PM

இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல: அமெரிக்கா

வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் அளவு உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல என்று வெள்ளை மாளிகை வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் உற்பத்திக்கான மூத்த ஆலோசகர் பீட்டர் நவரோ, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர இந்தியாதான் நிதி உதவி அளிக்கிறது என குற்றம் சாட்டி நேற்று ஒரு பதிவிட்டிருந்தார். அமைதிக்கான பாதை ஓரளவு புதுடெல்லி வழியாகவே செல்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று அவர் வெளியிட்டுள்ள தொடர் சமூக ஊடக பதிவுகளில், இந்தியாவை மேலும் கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அமெரிக்காவின் மூலோபாய பங்காளியாக நடத்தப்பட விரும்பினால், அது அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

இந்தியாவின் அதிக வரி விதிப்புக்கு பதிலளிக்கும் நோக்கில் 25% வரியையும், தேசிய பாதுகாப்புக்காக கூடுதலாக 25% வரியையும் அமெரிக்கா விதிக்கிறது. இந்தியாவின் பெரிய எண்ணெய் லாபி, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை ரஷ்யாவுக்கான ஒரு பெரிய சுத்திகரிப்பு மையமாகவும், மோசடியாக பணம் ஈட்டும் மையமாகவும் மாற்றியுள்ளது.

இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மலிவான விலைக்கு ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி அவற்றை சுத்திகரித்து, ஐரோப்பா, ஆப்ரிக்கா, ஆசிய கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. இன்று அது 30%க்கும் அதிகமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 15 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் எண்ணெயை வாங்குகிறது.

இந்த உயர்வுக்கு உள்நாட்டு தேவை அதிகரிப்பு காரணமல்ல. இந்தியா இப்போது நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பீப்பாய்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்கிறது. அதாவது, ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயில் பாதிக்கும் மேல் ஏற்றுமதியாகிறது. இதனால், ஒரு பக்கம் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களும் மறுபக்கம் ரஷ்யாவும் பலனடைந்து வருகிறார்கள்.

இந்தியாவுடன் அமெரிக்காவுக்கு 50 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்க இந்தியா அமெரிக்க டாலரை பயன்படுத்துகிறது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை தொடர்ந்து வாங்குகிறது. இந்தியாவின் இத்தகைய செயல்கள் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

உக்ரைன் ஆயுதங்களைப் பெற அமெரிக்கா செலவிடுகிறது. அமெரிக்க சந்தைகளில் இந்திய பொருட்கள் விற்கப்படுகின்றன. ஆனால், இந்திய சந்தை அமெரிக்காவுக்காக திறக்கப்படவில்லை. அதிக வரி விகிதம் மற்றும் தடைகள் காரணமாக அமெரிக்கப் பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில்லை.” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுக் கொள்கை குழு கண்டனம் தெரிவித்துள்ளது. “ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவைவிட அதிக கச்சா எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீது தடைகளை விதிப்பதற்குப் பதிலாக இந்தியா மீது விதித்திருப்பது இரு நாட்டு உறவை நாசமாக்கும் செயல். இது உக்ரைனைப் பற்றியது அல்ல.” என அக்குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x