Last Updated : 28 Aug, 2025 12:49 AM

 

Published : 28 Aug 2025 12:49 AM
Last Updated : 28 Aug 2025 12:49 AM

அமெரிக்கா | பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 2 குழந்தைகள் பரிதாப உயிரிழப்பு

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.

மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபோலிஸ் நகரில் இயங்கி வரும் ஒரு கத்தாலிக்க பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 395 குழந்தைகள் படிக்கும் இந்த பள்ளியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர், பள்ளியில் உள்ள தேவாலயத்தில் குழந்தைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஜன்னல் வெளியாக திடீரென குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளார்.

ரைபிள், ஷாட்கன், பிஸ்டல் உள்ளிட்ட துப்பாக்கி ரகங்களை கொண்டு அவர் இந்த தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த தாக்குதலை நடத்திய நபரும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மினசோட்டாவில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு முழுமையாகத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், "எஃப்.பி.ஐ விரைவாக செயல்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். இந்த பயங்கரமான சூழ்நிலையை வெள்ளை மாளிகை தொடர்ந்து கண்காணிக்கும். சம்பந்தப்பட்ட அனைவருக்காகவும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்யுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் அவரை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும், 20 வயது நபரான இவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட தேவாலயம் குறித்த தகவல்களை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இவற்றை இன்னும் மினியாபோலிஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

தாக்குதலை நடத்திய வெஸ்ட்மேன் ராபின் வைத்திருந்த ஆயுதங்களில் ‘NUKE India’ (அணு ஆயுதத்தை குறிப்பிட்டும்), ‘டொனால்டு ட்ரம்ப்பை கொல்’, ‘6 மில்லியன் போதாது’, ‘சாம்பலில் இருந்து உயிர் கொள்ளும் பீனிக்ஸ் போல எழுவோம்’ போன்ற வாசகங்கள் இருந்ததாக அமெரிக்காவை சேர்ந்த வலதுசாரி அரசியல் செயல்பாட்டாளர் லாரா லூமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x