Published : 26 Aug 2025 12:26 PM
Last Updated : 26 Aug 2025 12:26 PM
வாஷிங்டன்: கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மோதலின் போது 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறினார்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார். ஐந்து ஜெட் விமானங்களைத் தவிர, ஒரு பெரிய வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு விமானமும் அழிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வாஷிங்டன்னில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அணு ஆயுதப் போரை தடுத்தேன். இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் அணு ஆயுதப் போராக மாறக்கூடிய கட்டத்தில் இருந்தது. அவர்கள் ஏற்கனவே 7 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினர், நிலைமை தீவிரமாக இருந்தது.
அப்போது நான் சொன்னேன், 'நீங்கள் வர்த்தகம் செய்ய விரும்புகிறீர்களா? நீங்கள் தொடர்ந்து சண்டையிட்டால் நாங்கள் உங்களுடன் எந்த வர்த்தகமும் செய்யமாட்டோம். எனவே போரை நிறுத்த 24 மணிநேரம் தருகிறேன்' என்றேன். அவர்கள் இனி போர் நடக்காது என்றார்கள்.” என்றார். தற்போது ட்ரம்ப் 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறியுள்ளார். ஆனால், எந்த நாடு எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தியது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT