Last Updated : 23 Aug, 2025 04:22 PM

1  

Published : 23 Aug 2025 04:22 PM
Last Updated : 23 Aug 2025 04:22 PM

ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஜாமீன் மறுப்பு: சிறை மருத்துவமனைக்கு மாற்றம்

கொழும்பு: அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஜாமீன் மறுக்கப்பட்டது. உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் கொந்தளிப்பை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச 2022 ஜூலை மாதம் பதவி விலகினார். அவரது எஞ்சிய பதவிக் காலத்தில் ரணில் அதிபராகப் பொறுப்பேற்றார். 2024 செப்டம்பர் வரை அவர் அதிபராக பதவி வகித்தார். இவர் 5 முறை இலங்கை பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில், ரணில் அதிபராக இருந்தபோது, தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்துக்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப் புலனாய்வு துறை (சிஐடி) போலீஸார் அவரை நேற்று கைது செய்தனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பிரிவு 386, பிரிவு 5(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைவிலங்கிட்டு கொழும்பு கோட்டை மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

ரணில் விக்ரமசிங்கேவிடம் விசாரணை நடத்திய மேஜஸ்ட்ரேட் நிலுபுலி லங்காபுரா, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, ரணில் விக்ரமசிங்கே சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ரணில் விக்ரமசிங்கேவின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் அளவு அதிகமாக இருந்ததால் அவர் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, பிரதான எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகிந்த ராஜபக்ச, அவர் நல்ல மனநிலையில் உள்ளார். சாதாரணமாகவே இருந்தார். தான் கைது செய்யப்பட்டதில் அரசியல் இருப்பதாகவும், அரசியல்வாதிகளின் தலைவிதி இது என்றும் அவர் புரிந்து வைத்துள்ளார் என தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்துப் பேசியதாகவும், அவர் நலமாக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கே மீதான குற்றச்சாட்டு: கியூபா தலைநகர் ஹவானாவில் கடந்த 2023-ல் நடைபெற்ற ஜி77 உச்சி மாநாட்டில் ரணில் கலந்துகொண்டார். அவர் இலங்கை திரும்பும் வழியில் இங்கிலாந்து சென்றார். லண்டனில் தங்கிய அவர் தனது மனைவி மைத்ரியுடன் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.

இதற்கு இலங்கை மதிப்பில் ரூ. 1.66 கோடி அரசு நிதி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள ரணில் விக்ரமசிங்கே, தனது மனைவியின் பயணச் செலவுகளை தானே ஏற்றுக்கொண்டதாகவும், அரசு நிதியைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த விளக்கத்தை மறுத்துள்ள சிஐடி, ரணில் விக்ரமசிங்கேவின் தனிப்பட்ட பயணத்துக்காக அரசுப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும், அவரது மெய்க்காவலர்களுக்கும் அரசே பணம் கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x