Published : 22 Aug 2025 10:19 PM
Last Updated : 22 Aug 2025 10:19 PM
புதுடெல்லி: மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
‘காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது’ என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் ஃப்ளட்ச்சர் தெரிவித்துள்ளார்.
இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த 15-ம் தேதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது.
கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது. அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62,192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT