Published : 22 Aug 2025 08:17 AM
Last Updated : 22 Aug 2025 08:17 AM
வாஷிங்டன்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ரஷ்ய எல்லையில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த மாகாணம் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. கடந்த 1867-ம் ஆண்டில் ரஷ்யாவில் ஜார் மன்னர் ஆட்சி நடைபெற்றபோது அலாஸ்கா பகுதி அமெரிக்காவுக்கு ரூ.45 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றளவும் அலாஸ்கா முழுவதும் ரஷ்ய கலாச்சாரம் நிறைந்திருக்கிறது.
கடந்த 15-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்த மார்க் வாரனுக்கு ரூ.19 லட்சம் மதிப்புள்ள யூரல் பைக்கை பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து மார்க் வாரன் கூறியதாவது: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண தீயணைப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். ரஷ்ய தயாரிப்பான யூரல் பைக்கின் தீவிர ரசிகனான நான், பழைய யூரல் பைக்கை வாங்கி ஓட்டி வந்தேன்.
அதிபர் புதினின் வருகைக்காக ரஷ்ய ஊடகங்களின் செய்தியாளர்கள், ஆங்கரேஜ் நகரில் முகாமிட்டிருந்தனர். யூரல் பைக்கில் சென்ற என்னிடம் அவர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது யூரல் பைக்கின் உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக ரஷ்ய செய்தியாளர்களிடம் தெரிவித்தேன்.
என்னுடைய பேட்டி ரஷ்ய அதிபர் புதினின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. அவர் எனக்கு புதிய யூரல் பைக்கை பரிசாக வழங்கி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆங்கரேஜ் நகரில் ரஷ்ய அதிகாரிகள், என்னிடம் புதிய யூரல் பைக்கை வழங்கினர். அதற்காக ஒரு பைசாவைகூட பெறவில்லை. இது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு மார்க் வாரன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT