Published : 21 Aug 2025 03:00 PM
Last Updated : 21 Aug 2025 03:00 PM
நியூயார்க்: இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா நடத்த வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக 25% வரியை விதித்துள்ளார். இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவைத் தாண்டி சர்வதேச அளவில் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெற்கு கலோரிலான மாகாண முன்னாள் ஆளுநரும், ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, பின்னர் போட்டியில் இருந்து விலகியவருமான நிக்கி ஹேலி, இது தொடர்பாக நியூஸ் வீக் இதழில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.
நிக்கி ஹேலி எழுதியுள்ள அந்தக் கட்டுரையில், "சீனாவை முறியடித்து வலிமையின் மூலம் அமைதியை நிலைநாட்டுவது என்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் இலக்குகள் மிக முக்கியமானவை. அமெரிக்க - இந்திய உறவுகளை மீண்டும் இயல்பான பாதைக்கு திருப்புவதைவிட இந்த இலக்குகள் மிகவும் முக்கியமானவை. இதற்காக, சீனாவைப் போல எதிரியாகக் கருதாமல், மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக இந்தியாவை அமெரிக்கா நடத்த வேண்டும்.
ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து வரும் நாடாக சீனா உள்ள போதிலும் அமெரிக்காவின் வரிவிதிப்பை அது தவிர்த்து வருகிறது. இந்தியா - அமெரிக்கா இடையேயான நெருக்கமான உறவில் இந்த பாரபட்சம் பெரிய விஷயம் இல்லை என அமெரிக்கா நினைக்குமானால், அது யதார்த்தமல்ல. இந்தியா உடனான உறவை சரிவில் இருந்து மீட்பதே அமெரிக்க வெளியுறவு கொள்கையின் மிக முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
ஆசியாவில் சீன ஆதிக்கத்துக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே நாடாக உள்ள இந்தியாவுடன், தனக்கு இருக்கும் 25 ஆண்டு கால நெருக்கத்தை முறித்துக்கொள்வது உத்தி சார்ந்த பேரழிவாக இருக்கும். ஜவுளி, தொலைபேசிகள், சோலார் பேனல்கள் போன்ற துறைகளில் அதிக அளவில் உற்பத்தித் திறனை கொண்டிருக்கும் நாடு இந்தியா. இவற்றை சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை மாற்ற அமெரிக்கா வேண்டுமானால், அதற்கு இந்தியா மிகவும் முக்கியமானது.
பாதுகாப்புத் துறையில், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடனான இந்தியாவின் உறவு விரிவடைந்து வருகிறது. இதன்மூலம், சுதந்திர உலகின் மிக முக்கிய சொத்தாக இந்தியா திகழ்கிறது. மேற்கு ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி, சீனாவின் வர்த்தக பாதைகளில் இந்தியாவுக்கு இருக்கும் இடம் ஆகியவை அந்நாட்டை அமெரிக்காவுக்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாளியாக ஆக்குகிறது” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT