Published : 17 Aug 2025 04:15 PM
Last Updated : 17 Aug 2025 04:15 PM
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும் பிரதமரும் மாற்றப்படப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தெரிவித்துள்ள அந்நாட்டின் ராணுவத் தளபதி அசிம் முனிர், தான் பதவிகளை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அந்நாட்டின் அரசியலில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு ராணுவத் தளபதி அசிம் முனிர் அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனைத் தொடர்ந்து சில வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாகவும் அவர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
இது பாகிஸ்தானில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் ஆழமான விவாதத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே, பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரிக்கும் அசிம் முனிருக்கும் இடையே கருத்து மோதல்கள் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகின. தற்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கும் அசிம் முனிருக்கும் இடையேயும் மோதல் போக்கு நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், பாகிஸ்தானில் அதிபர் மற்றும் பிரதமரை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. பாகிஸ்தானில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக பாகிஸ்தானின் ஜாங் இதழின் கட்டுரையாளர் சுஹைல் வாராய்ச் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கட்டுரையில், "ராணுவத் தளபதி அசிம் முனிரின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது பெல்ஜியம் நாட்டுக்கும் சென்றார். தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அசிம் முனிர், 'கடவுள் என்னை நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். அதைத் தவிர வேறு எந்தப் பதவியையும் நான் விரும்பவில்லை. நான் ஒரு ராணுவ வீரன். எனது மிகப் பெரிய ஆசை நாட்டுக்காக உயிர்துறப்பதே' என தெரிவித்தார்.
பிரஸ்ஸல்ஸ் கூட்டம் தவிர தனிப்பட்ட முறையிலும் என்னுடன் சுமார் 2 மணி நேரம் அசிம் முனிர் பேசினார். அப்போதும், அதிபர் மற்றும் பிரதமர் மாற்றம் குறித்த செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்தார். அத்தகைய வதந்திகள் முற்றிலும் தவறானவை என அவர் கூறினார். நாட்டின் அரசியல் ஒழுங்கை சீர்குலைக்க இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்தியா மற்றும் ஆப்கனிஸ்தானுக்கு எதிராகப் பேசிய அசிம் முனிர், 'பாகிஸ்தானின் அமைதியை சீர்குலைக்க இந்தியா பினாமிகளைப் பயன்படுத்துகிறது. ஆப்கனியர்களுக்கு நாங்கள் பல ஆண்டுகளாக கருணையையும் சலுகைகளையும் காட்டினோம். ஆனால், அவர்கள் இந்தியாவுடன் இணைந்து எங்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள்.
பாகிஸ்தானில் அரிய கனிமங்கள் உள்ளன. இந்த புதையல்களை பயன்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் கடனை பெருமளவில் குறைக்க முடியும். மேலும், விரைவில் பாகிஸ்தானும் வளமான சமூகங்களில் ஒன்றாக மாறும்.
ரெக்கோ டிக் சுரங்கத் திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டு முதல் பாகிஸ்தான் ஆண்டுதோறும் குறைந்தது 2 பில்லியன் டாலர் நிகர லாபம் ஈட்டும். இந்த தொகை ஆண்டுதோறும் அதிகரிக்கும். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பாகிஸ்தான் சமநிலையை கடைப்பிடிக்கும். ஒரு நண்பருக்காக நாங்கள் மற்றொரு நண்பரை தியாகம் செய்ய மாட்டோம்' என்று அசிம் முனிர் தெரிவித்தார்" என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT