Published : 08 Aug 2025 09:08 AM
Last Updated : 08 Aug 2025 09:08 AM
வாஷிங்டன்: சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 30 அன்று, டொனால்டு ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அவரிடம், ‘50 சதவீத வரிவிதிப்புக்குப் பிறகு இந்தியாவுடனாக வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுமா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ட்ரம்ப், “சிக்கல்கள் தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்த விவகாரம் குறித்து டெல்லியில் பேசிய பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்துவருகிறது. விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்போரின் நலன்களில் மத்திய அரசு சமரசம் செய்துகொள்ளாது. அவர்களது நலனை ஒருபோதும் விட்டுத் தராது. இதற்காக எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று மறைமுகமாக தெரிவித்தார்.
உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிவிகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அமெரிக்காவில் இருந்து பால், பாலாடை கட்டி, நெய் ஆகியவற்றை இந்தியாவில் இறக்குமதி செய்ய அந்த நாடு விரும்புகிறது. இது இந்திய விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்பதால் அமெரிக்க பால் பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதேபோல, அமெரிக்காவில் இருந்து கோதுமை, சோயாபீன், சோளம், ஆப்பிள், திராட்சை, கொட்டை வகைகளை இந்தியாவில் விற்பனை செய்யவும் அந்த நாடு அனுமதி கோரி வருகிறது. அதோடு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு தானியங்களையும் இந்தியாவில் விற்பனை செய்ய அமெரிக்கா விரும்புகிறது. அதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.
மேலும், ‘ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும்’ என்றும் ட்ரம்ப் நிர்ப்பந்தம் செய்து வருகிறார். ஆனால், அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி, ரஷ்யாவிடம் இருந்து கச்சாஎண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது. இந்தச் சூழலில், இந்திய பொருட்களுக்கான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரித்து ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT