Published : 08 Aug 2025 06:50 AM
Last Updated : 08 Aug 2025 06:50 AM
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இந்தாண்டு இந்தியா வருகிறார் என மாஸ்கோவில் அளித்த பேட்டியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். இந்தியா - ரஷ்யா இடையே ராணுவ உறவுகளை விரிவாக்கும் நோக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா சென்றுள்ளார்.
அவர் அதிபர் புதினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தாண்டு இந்தியா வருகிறார் ” என கூறினார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் ஏற்பட்ட பின் ரஷ்ய அதிபர் புதின் முதல் முறையாக இந்தியா வரவுள்ளார். கடந்தாண்டு ரஷ்ய அதிபர் புதினை, பிரதமர் மோடி இரு முறை சந்தித்தார். கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தியா - ரஷ்யா இடையேயான 22-வது ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.
இது பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்றபின் முதல் முறையாக ரஷ்யாவுக்கு சென்ற பயணமாகும். அப்போது பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரு தி அபோஸ்டில்’ விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. இந்தியா - ரஷ்யா இடையயான உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டி இந்த விருது அளிக்கப்பட்டது.
அதன்பின் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யாவின் காசன் நகருக்கு கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி சென்றார். அப்போதும் அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். தற்போது ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதோடு, உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தாவிடில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது இரண்டாம் கட்ட பொருளாதார தடை விதிக்கப்படும் எனவும் அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சூழலில் ரஷ்ய அதிபர் புதின், இந்தியா வருகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இந் நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்யா சென்று அதிபர் புதினை சந்தித்து பேசினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக அவர் அதிபர் புதினிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிபர் புதின், விரைவில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. இதை ரஷ்ய வெளியுறவுத்துறை ஆலோசகர் யூரி உஷாகோவும் உறுதி செய்துள்ளார். இந்த சந்திப்பிற்கான இடம், ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT