Published : 07 Aug 2025 07:01 AM
Last Updated : 07 Aug 2025 07:01 AM
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்தை நடத்தினார்.
உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிக தீவிரமாக உள்ளார். இதற்காக உக்ரைனுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டு போரை நிறுத்த வேண்டி ரஷ்யாவுக்கு 50 நாட்கள் வரை காலக்கெடு விதிப்பதாக டொனல்டு ட்ரம்ப் தெரிவித்தார். இல்லையெனில் கடுமையான பொருளாதார அபராதங்களை ரஷ்யா எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ட்ரம்ப் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று அவரது சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் அவசர அவசரமாக ரஷ்யாவுக்கு சென்று அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த பேச்சுவார்த்தையில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன என்பது குறித்த விவரங்களை ரஷ்ய அதிபரின் மாளிகை உடனடியாக வெளியிடவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் அண்டை நாடான உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியது அதிலிருந்து ஏராளமான சர்வதேச தடைகளை சந்தித்துள்ளோம். அவற்றை வெற்றிகரமாக சமாளித்துள்ளோம். சர்வதேச தடைகள் அனைத்தும் குறைந்த அளவிலான தாக்கத்தை மட்டுமே ஏற்படுத்த முடிந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT