Last Updated : 06 Aug, 2025 08:51 PM

 

Published : 06 Aug 2025 08:51 PM
Last Updated : 06 Aug 2025 08:51 PM

இந்தியப் பொருட்களுக்கு 50% வரி: கூடுதலாக 25% விதித்த ட்ரம்ப் கூறும் காரணம் என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி | கோப்புப்படம்

நியூயார்க்: இந்தியப் பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இதன்மூலம் இப்போது இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதித்துள்ளது அமெரிக்கா. தனது எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வருவதாக கூறி, இந்த கூடுதல் வரியை ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிவித்த 25% வரியோடு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி விதிப்பு காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை இந்தியா செலுத்த வேண்டி உள்ளது. இது சீனாவை காட்டிலும் 20 சதவீதமும், பாகிஸ்தானை காட்டிலும் 21 சதவீதம் அதிகமாகும்.

“ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருவதை நான் அறிவேன். அதனால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது கூடுதல் வரியை விதிப்பது அவசியம் என்று கருதுகிறேன்” என ட்ரம்ப் தற்போது தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். முன்னதாக, அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியா மீதான வரியை கணிசமாக உயர்த்தப் போவதாக ட்ரம்ப் நேற்று எச்சரித்திருந்தார். இந்நிலையில், சொன்னபடியே தற்போது கூடுதல் வரியை அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா​வுக்கு ஓராண்​டில் ரூ.8,650 கோடி அளவுக்கு இந்​தியா ஏற்​றுமதி செய்​கிறது. இது வர்த்தகத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த கூடுதல் விரி விதிப்பு வரும் 27-ம் தேதி முதல் அமலாகும் என தெரிகிறது. ட்ரம்ப் தனது உத்தரவில் 21 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்.

முன்னதாக, நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “இந்தியா ரஷ்ய எண்ணெயை பெருமளவில் வாங்குவது மட்டுமல்லாமல், வாங்கிய எண்ணெயில் பெரும்பகுதியை திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்கிறது. ரஷ்ய போர் இயந்திரத்தால் உக்ரைனில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு இந்தியா செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, இந்திய வெளி​யுறவு அமைச்​சகம் அளித்த விளக்கத்தில், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்​காக அமெரிக்கா​வும் ஐரோப்​பிய ஒன்​றிய​மும் இந்​தி​யாவை தொடர்ந்து குறிவைத்து வரு​கின்​றன. இந்​தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகம் செய்து வந்த நாடு​கள், உக்​ரைன் போருக்கு பிறகு ஐரோப்​பிய நாடு​களுக்கு கச்சா எண்​ணெய் விநி​யோகிக்க தொடங்​கி​விட்​டன.

அந்த இக்​கட்​டான நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​தோம். இதற்கு அமெரிக்கா​வும் ஆதரவு அளித்​தது. சர்​வ​தேச சந்​தை​யில் கச்சா எண்​ணெய் விலை உயர்வை தடுக்க இந்​தி​யா​வுக்கு ஆதரவு அளிப்​ப​தாக அமெரிக்கா கூறியது. இந்த விவ​காரத்​தில் இந்​தியா மீது குற்​றம் சுமத்​தும் நாடு​கள் ரஷ்​யா​வுடன் தொடர்ந்து வர்த்​தகத்​தில் ஈடு​பட்டு வரு​கின்றன.

கடந்த 2023-ம் ஆண்​டில் ஐரோப்​பிய ஒன்​றி​யம், ரஷ்​யா​வுடன் 17.2 பில்​லியன் யூரோ, கடந்த 2024-ம் ஆண்​டில் 67.5 பில்​லியன் யூரோ மதிப்​பில் இருதரப்பு வர்த்தகத்​தில் ஈடு​பட்​டிருக்​கிறது. இந்த சூழலில் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வ​தாக இந்​தியா மீது குற்​றம் சாட்​டு​வது நியாயமற்றது, ஏற்​றுக் கொள்ள முடி​யாதது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் இரட்டை வேடம் போடுகின்றன. நாட்​டின் நலன் மற்​றும் பொருளா​தார பாது​காப்பை உறுதி செய்ய தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் இந்​தியா மேற்​கொள்​ளும்” என்று தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, 69 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கடந்த 31-ம் தேதி கையெழுத்திட்டார். இதில், சிரியாவுக்கு அதிகபட்சமாக 41 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 14 ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு இது அதிக வரி விதிப்பாகும். அடுத்ததாக, லாவோஸ், மியான்மருக்கு 40 சதவீதம், சுவிட்சர்லாந்துக்கு 39 சதவீதம், இராக், செர்பியாவுக்கு 35 சதவீத வரி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x