Published : 06 Aug 2025 11:43 AM
Last Updated : 06 Aug 2025 11:43 AM
சென்னை: பயங்கரவாத அச்சுறுத்தல், கடன் சுமையால் மூழ்கும் பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத நிலையில் நிலவில் தரையிறங்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் விண்வெளி முகமையான ‘SUPARCO’, இதுவரை தன்னிச்சையாக வடிவமைத்த செயற்கைகோள் அல்லது விண்வெளி திட்டம் என எதையும் மேற்கொண்டது இல்லை. அனைத்தும் சீனாவின் ஆதரவுடன்தான் மேற்கொண்டு வருகிறது. காலநிலை மாற்றம் சார்ந்த அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக கடந்த மாதம் பாகிஸ்தான் விண்ணில் நிலைநிறுத்திய ரிமோட் சென்ஸிங் செயற்கைக்கோள் சீனாவில் இருந்து ஏவப்பட்டது. பாகிஸ்தான் கொடி உடன் அது விண்ணில் ஏவப்பட்டு இருந்தாலும் தொழில்நுட்ப ரீதியான பணிகளை சீனா மேற்கொண்டதாக தகவல்.
இந்நிலையில், சீனா சென்றுள்ள பாகிஸ்தான் அமைச்சர் ஹசன் இக்பால், தங்கள் நாட்டின் விண்வெளி திட்டங்கள் குறித்து திங்கட்கிழமை அன்று பேசி இருந்தார். அதற்கு சீனாவின் உதவி அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தான் வரும் 2035-ம் ஆண்டில் நிலவில் விண்கலனை தரையிறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அடுத்த ஆண்டு பாகிஸ்தானை சேர்ந்த விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு சீனாவின் Chang’e 8 திட்டத்திலும் பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவிலான சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி நிலையம் தொடர்பான திட்டத்தில் ஒரு பகுதியாகும். பாகிஸ்தானின் இந்த விண்வெளி சார்ந்த முயற்சிகளில் சீனாவின் பங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1961-ல் SUPARCO-வை நிறுவியது பாகிஸ்தான். இருப்பினும் விண்வெளி திட்டம் சார்ந்த பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாத காரணத்தால் அதன் பணியில் பின்னடைவு ஏற்பட்டது.
கடந்த 2023-ல் இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளி சார்ந்த பல்வேறு பணிகளில் முன்னணியில் உள்ளது. அதன் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறது. மற்ற நாடுகளின் செயற்கைக்கோள்களை குறைந்த செலவில் விண்ணில் செலுத்துவதும் இதில் ஒன்றாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT