Last Updated : 01 Aug, 2025 08:50 PM

2  

Published : 01 Aug 2025 08:50 PM
Last Updated : 01 Aug 2025 08:50 PM

ட்ரம்ப்பின் ‘போர் நிறுத்த’ விழைவுகளும், ‘அமைதி’ நோபல் பரிசு தாகமும்! - ஒரு பார்வை

‘விருது’ என்பது ஒருவரின் சாதனை, திறமை அல்லது சேவையைப் பாராட்டி அவரை கவுரவிக்க வழங்கப்படும் அடையாளம். அந்த வகையில் உலகின் உயரிய விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. ஸுவீடன் அரசு இந்த மிகப் பெரிய அங்கீகாரத்தை அறிவியல், மருத்துவம், கலை, இலக்கியம், அமைதி எனப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்குகிறது. இவற்றில், அமைதிக்கான நோபல் பரிசுதான் இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் குறி. இப்போது என்றால் இப்போது அல்ல, அவர் முதன்முறை அதிபராக இருந்தபோதிருந்தே இந்த நோபல் மீது ‘இரு கண்களும்’ இருந்து வருகிறது.

‘தீராத மோகம்’ - அமைதிக்கான நோபல் பரிசு மீதான ட்ரம்ப்பின் மோகம் எத்தகையது என்றால், சில மாதங்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரை வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது அவரிடம் வெளிப்படையாகவே ஆதங்கத்தைப் பதிவு செய்யும் அளவுக்கு கட்டுக்குள் அடங்காதது.

“நான் அமைதி நோபல் பரிசுக்குத் தகுதியானவன். ஆனால், நான் என்ன செய்தாலும் அவர்களுக்கு எனக்கு அதைத் தர மாட்டார்கள்” என்று வெளிப்படையாகக் ஆதங்கப்படும் அளவுக்கு தீராத மோகம் அது. ‘79 வயதில் அவரது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது நோபல் பரிசு மீதான வேட்கை’ என்று அவரை அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்கும் அளவுக்கு பல்வேறு தருணங்களில் ‘ஓபனாக’ பேசியிருக்கிறார் ட்ரம்ப்.

கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அணு ஆயுதப் பரவலை தடுப்பதற்காகப் பணியாற்றியதாக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் அதிபரானவர் தான் டொனால்டு ட்ரம்ப். முன்னவர் வழியில் நோபல் பரிசு தனக்கும் தானாகவே வந்து சேர வேண்டும் என்று அவர் கணிக்கிறாரோ என்னவோ என்பது போலவே அவருடைய உரிமைக் கோரல் குரல்கள் உள்ளன என்ற விமர்சனங்களும் உண்டு.

அமைதி நோபலுக்கான தகுதிகள்: அமைதிக்கான நோபல் பரிசானது நாடுகளுக்கு இடையேயான சகோதரத்துவத்தைப் பேணிய / ராணுவ மோதல்களை நிறுத்திய அல்லது கட்டுப்படுத்திய / அமைதி மாநாடுகளை நடத்திய, ஊக்குவித்த தனிநபர் அல்லது இயக்கங்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த விருதாளர்களில் நன்கு பரிச்சியமான சிலரது பெயர்களை பட்டியலிட்டால் அதில் மார்டின் லூதர் கிங், தலாய் லாமா, ஆங் சான் சூச்சி, நெல்சன் மண்டேலா, யாசர் அராஃபத், கோஃபி அனான், ஜிம்மி கார்டர், வாங்காரி மத்தாய், மலாலா யூசுப் சாயி, பராக் ஒபாமா, நர்கீஸ் முஹமதி போன்ற பிரபலங்களும், சர்வதேச உணவுத் திட்டம், சென்டர் ஃபார் சிவில் லிபர்டீஸ் போன்ற பிரபல அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது சிறிய எண்ணிக்கை தான். இத்தகைய ‘நோபல்’ பட்டியலில் தான் இடம்பிடிக்க விரும்புகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

முன்னதாக, பராக் ஒபாமா அந்த விருதைப் பெற்றபோது, “எனக்கு முன்னால் இந்த விருதைப் பெற்றவர்களோடு ஒப்பிடுகையில், நான் சாதித்ததாகச் சொல்லப்படுவது எதுவுமே இல்லை” என்று கூறியிருந்தார். அதேபோல், ஒபாமா தனது நினைவுக் குறிப்பிலும், “அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு அறிவிக்கப்பட்டவுடன், ‘எதற்காக’ என்பதுதான் எனது முதல் கேள்வியாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்ததும் நினைவுகூரத்தக்கது.

சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட விருது உண்டோ என்பதுபோல், அமைதிக்கான நோபல் பரிசுகள் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் இருந்தன.

குடியரசுக் கட்சி செனட்டர்கள் முதல் பாகிஸ்தான் வரை... - அமைதிக்கான நோபல் விருதுக்கான நபரை அல்லது அமைப்பை, மக்கள் குழுவோ, அரசாங்கங்களோ, அரசுப் பிரதிநிதிகளோ, சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்களோ, கல்லூரிப் பேராசிரியர்களோ அல்லது அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முந்தைய உறுப்பினரோ பரிந்துரைக்கலாம். அந்தப் பரிந்துரைகளில் இருந்து ஒருவர் / ஓர் அமைப்பு தேர்வு செய்யப்படும். இதுதான் நடைமுறை.

இப்போது இந்த நடைமுறையைப் பின்பற்றிதான் ட்ரம்பை அவர் சார்ந்த குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் பலரும் பரிந்துரைத்து வருகின்றனர். வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்புகள் துறை இயக்குநர் ஸ்டீவன் சியுங் அண்மையில் அளித்தப் பேட்டி ஒன்றில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அந்த விருதின் சட்ட அந்தஸ்தையே நீர்த்துப் போகச் செய்யும். ட்ரம்ப் உலகம் முழுவது நல்லிணக்கத்தை ஏற்படுத்திவருகிறார். அவரது செயலுக்கு சரியான அங்கீகாரம் தான் அமைதிக்கான நோபல் பரிசு” என்று கூறியிருந்தார்.

கடந்த மாதத் தொடக்கத்தில் குடியரசுக் கட்சியின் கலிபோர்னியா மாகாண உறுப்பினர் டாரல் இஸா, “மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டியதற்காக ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது நண்பர் டொனால்டு ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் அரசு சார்பில் பரிந்துரைத்துள்ளார். அதேபோல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின்னர் பாகிஸ்தானும் இதே கோரிக்கையை முன்வைத்து, அவரது பெயரை பரிந்துரைத்துள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், எதியோபிய பிரதமர் அபே அகமது அலி உள்ளிட்டோரும் முந்தைய காலங்களில் ட்ரம்பை அமைதி நோபலுக்காக பரிந்துரைத்துள்ளனர்.

ட்ரம்ப்பின் போர் நிறுத்த விழைவு: அமைதிக்கான நோபல் பரிசு என்னை வந்தடைவதே அதற்கான அந்தஸ்து என்ற தொனியிலேயே பேசிவரும் அதிபர் ட்ரம்ப், அதை அடைவதற்கு முன்வைக்கும் முக்கிய காரணம் ‘போர் நிறுத்தம்’. ஒன்றல்ல, இரண்டல்ல பல போர்களை நான் நிறுத்திவிட்டேன் என்று அவரே மார்தட்டிக் கொள்கிறார். 2-வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது மேற்கொண்ட பிரச்சாரங்களில் கூட, “நான் அதிபரான 100 நாட்களுக்குள் ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவேன்” என்ற வாக்குறுதி மிக முக்கியமானதாக முன்வைக்கப்பட்டது.

ஆனால், ட்ரம்ப் அதிபரானவுடன் என்ன செய்தார்? அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்பதே அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவதன் (MAGA) அவரது தாரக மந்திரத்தின் அடிநாதம். குடியேற்ற விதிகளில் திருத்தம், சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புதல், ஹார்வர்டு உள்ளிட்ட அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு கெடுபிடி என பல நெருக்கடிகளை கட்டவிழ்த்தார். இவற்றில் பல ஃபெடரல் நீதிமன்றத்தால் இடைக்கால தடை விதிப்புக்கு உள்ளாகி ட்ரம்பின் வானளாவிய அதிகாரங்களுக்கு செக் வைத்தன. இருந்தாலும் சற்று தளராமல் இறக்குமதி வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார் ட்ரம்ப். இதை ஊடகங்கள் ட்ரம்ப்பின் ‘வர்த்தக போர்’ என்றுதான் விளிக்கின்றன.

இத்தகைய சூழலில்தான், செர்பியா - கொசோவா போரை நிறுத்தியதற்காக, எகிப்து - எதியோபியா போரை நிறுத்தியதற்காக, மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டியதற்காக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை வர்த்தக ஒப்பந்தங்களை சுட்டிக்காட்டி நிறுத்தியதற்காக, ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த முயற்சித்து வருவதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று ட்ரம்பே மீண்டும் மீண்டும் கூறிவருகிறார். எங்கு போர் நடந்தாலும் அதை ஓடோடிச் சென்று நிறுத்தும் சர்வதேச மத்தியஸ்தராக தன்னை முன்னிலைப்படுத்தியும் வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினே என்று ட்ரம்ப் 30 முறை கூறியிருக்கிறார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

காசாவுக்கும் பாயுமா? - எதியோபியா, காங்கோ முதல் செர்பியா - கொசோவா வரை நீளும் ட்ரம்ப்பின் போர் நிறுத்த விழைவு என்பது காசாவை நோக்குமா என்பதுதான் சர்வதேச அமைதிக்காக குரல் கொடுப்போரின் கேள்வியாக உள்ளது.

ஜூலை 30 கணக்கின்படி காசாவில் 62,700 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வருகின்றன. போர நிறுத்தம் என்று சொல்லிவிட்டு அன்றாடம் தாக்குதல்களை நடத்தி வருகிறது இஸ்ரேல். மேலும், காசாவுக்கான உணவு, மருத்துவ உதவிகளைத் தடுத்து பட்டினி தாக்குதலையும் நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேலிம் இந்த பட்டினி தாக்குதலுக்கு எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வருகின்றன. இச்சூழலில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது ட்ரம்ப் நிர்வாகம்.

எல்லா போர்களையும் நிறுத்தியதாக சொல்வது சரிதான், காசாவுக்கு என்ன வழி என்று கேள்விகள் வலுக்கவே, அத்திபூத்தார் போல், “காசா குழந்தைகள் மிகுந்த பட்டினியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்று கருத்து சொல்லியிருக்கிறார் ட்ரம்ப். மேலும், ட்ரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்ட்வீ விட்காஃப் நிலைமையை நேரில் ஆய்வு செய்ய காசா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசாவில் போரை முழுமையாக நிறுத்தி, அங்கு பட்டினிக்கு முற்றுப்புள்ளி வைக்க முதலில் வழி செய்திவிட்டு அமைதிக்கான நோபல் பரிசை கோரட்டும் என்கின்றனர் ஆர்வலர்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x