Published : 30 Jul 2025 08:41 AM
Last Updated : 30 Jul 2025 08:41 AM
வாஷிங்டன்: இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரையில் வரி விதிக்க வாய்ப்புள்ளதாக அவர் சூசகமாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அப்போது, உலக நாடுகளின் பொருட்களுக்கான இறக்குமதி வரி பட்டியலை வெளியிட்டார். இது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது. பின்னர் இந்த புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி கெடு முடிய இருந்த நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டித்தார்.
இதனிடையே, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் ஜப்பான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்டவற்றுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவுடனும் வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அன்று விமானத்தில் இருந்தபடி செய்தியாளர்களை ட்ரம்ப் சந்தித்தார். அப்போது இந்தியாவுக்கு 20 முதல் 25 சதவீதம் வரை வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர் ஒருவர் ட்ரம்ப்பிடம் வினவினார்.
“நானும் அப்படித்தான் நினைக்கிறேன். இந்தியா நட்பு நாடாக விளங்கி வருகிறது. எனது வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் உடனான மோதலை நிறுத்தினார்கள். வரி விதிப்பு தொடர்பாக அவர்களுடனான ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது தொடர்பான பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
இருந்தாலும் மற்ற நாடுகளை காட்டிலும் அதிக வரிகளை இந்தியா விதித்துள்ளது. இது பல ஆண்டுகளுக்கு நடைமுறையில் உள்ளது. இப்போது நான் அதிபராக உள்ளேன். அதனால் நீங்கள் அதை தொடர கூடாது” என ட்ரம்ப் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT