Published : 29 Jul 2025 08:34 AM
Last Updated : 29 Jul 2025 08:34 AM
சனா: ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபுபக்கர் முஸ்லியாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்கர் முஸ்லியார் மத்தியஸ்தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.
அபுபக்கர் முஸ்லியார் கோரிக்கையை ஏற்று ஏமன் நாட்டை சேர்ந்த மதகுரு ஹபீப் உமர் பின் ஹபீஸ், நிமிஷாவின் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும், தண்டனையை பரிசீலிக்கவும் வல்லுநர் குழுவை அமைத்தார். இந்த பேச்சுவார்த்தை மற்றும் தண்டனை பரிசீலனையில் ஏற்பட்ட இறுதி உடன்பாட்டின்படி நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஏமனின் சமூக செயற்பாட்டாளர் சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இவர் கொல்லப்பட்ட தலால் அப்தோ மெஹ்திக்கு நீதி வேண்டும் கவுன்சிலின் செய்தித்தொடர்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“மத குருமார்களின் வலுவான தலையீடு காரணமாக நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது நிமிஷா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்” என சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி கூறியுள்ளார்.
முன்னதாக, தலால் அப்தோ மெஹ்தியின் குடும்பத்தினர், நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து என்ன? - ஏமன் நாட்டில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறையில் உள்ள நிமிஷாவுக்கு முன் இப்போது இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். குருதிப் பணம் என சொல்லப்படும் ‘தியா’ பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீடாக பெற்றுக் கொண்டால் நிமிஷா சிறையில் இருந்து வெளியில் வரலாம். அந்தக் குடும்பத்தினர் ஏற்க மறுக்கும் பட்சத்தில் அவர் சிறையில் இருக்க வேண்டும் என இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
குற்றப் பின்னணி எனன்? - கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது.
சட்டரீதியான முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், மெஹ்தி குடும்பத்தினருக்கு ரூ.8.6 கோடி குருதிப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்பத்தினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, நிமிஷாவின் மரண தண்டனையை தள்ளிவைக்குமாறு மத்திய அரசு சார்பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூலமாகவும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. கேரளாவை சேர்ந்த முஸ்லிம் மத தலைவர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்கர் முஸ்லியாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT