Published : 28 Jul 2025 04:44 PM
Last Updated : 28 Jul 2025 04:44 PM
கோலாலம்பூர்: தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்
தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் இன்று மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் இணைந்து பேசிய மலேசிய பிரதமர் அன்வர், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தை காணும் வகையில் நல்ல முடிவுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.” என்று அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் இணைந்து மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண மலேசியா நெருங்கிய தொடர்பில் உள்ளது என அன்வர் கூறினார். இன்று (ஜூலை 28) நள்ளிரவு அமலுக்கு வரும் வகையில் கம்போடியாவும் தாய்லாந்தும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அன்வர் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்குமான நடவடிக்கையில் முதல் படியாகும் என்றும் அன்வர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமை (ஜூலை 24) எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து வீரர்கள் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. மோதல்களைத் தொடங்கியதற்காக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 5-வது நாளாக நீடிக்கும் இந்த போரில் இருதரப்பிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பிலும் 2,60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்த்துள்ளனர். இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றதுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT