Published : 28 Jul 2025 06:42 AM
Last Updated : 28 Jul 2025 06:42 AM
டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் யாஹ்யா சின்வர். இவருக்கும் சமர் முகமது அபு ஜாமருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சின்வர் உயிரிழந்தார்.
சின்வரின் மனைவி சமர் தனது குழந்தைகளுடன் வேறு ஒரு பெண்ணின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி ரபா எல்லை வழியாக எகிப்துக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து துருக்கியில் வசித்து வந்த அவர், தனது கணவரின் மரணத்துக்குப் பிறகு அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக போக்குவரத்து வசதி, உயர்மட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு மற்றும் அதிக அளவு பணம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சின்வர் மரணத்துக்குப் பிறகு அவருடைய சகோதரர் முகமது சின்வர் ஹமாஸ் தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் அவரும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனிடையே, முகமது சின்வரின் மனைவி நஜ்வாவும் ரபா எல்லை வழியாக காசாவை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த 2 பெண்களுமே தங்களுடைய கணவரின் மரணத்துக்கு முன்பே காசாவை விட்டு வெளியேறியதாக தகவல்கள் கூறுகின்றன.
காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் போர் 21 மாதங்களாக தொடர்கிறது. இதுவரை 59 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT