Published : 26 Jul 2025 02:41 AM
Last Updated : 26 Jul 2025 02:41 AM

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சுந்தர் பிச்சை!

வாஷிங்டன்: ஆல்பபெட் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுந்தர் பிச்சை (53) உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தமிழகத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கல்வியறிவின் மூலம் ஸ்டான்போர்டு பல்கலையில் கடந்த 1993-ல் உதவித் தொகை பெற்று உயர்கல்வியை முடித்தவர் சுந்தர் பிச்சை. பின்பு இவர் கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அளவுக்கு தனது திறனை வளர்த்துக் கொண்டார்.

கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக கடந்த 2015-ல் பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை 2019-ல் ஏற்றுக் கொண்டார்.

சுந்தர் பிச்சை தலைமைப் பொறுப்பில் இருந்த கடந்த 10 ஆண்டுகளில் ஆல்பபெட் நிறுவன பங்கின் விலை பல மடங்கு அதிகரித்து 2023-லிருந்து முதலீட்டாளர்களுக்கு 120 சதவீத வருவாயை வழங்கியுள்ளது.

அந்த வகையில், சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளதாக புளும்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆல்பபெட் நிறுவனர்களான லாரி பேஜ் 171.2 பில்லியன் டாலர், செர்ஜி பிரின் 160.4 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் ஏழு பேரில் ஒருவராக இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x