Last Updated : 21 Jul, 2025 06:11 PM

 

Published : 21 Jul 2025 06:11 PM
Last Updated : 21 Jul 2025 06:11 PM

வங்கதேசத்தில் பள்ளி மீது பயிற்சி விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் பலி

டாக்கா: வங்கதேச விமானப் படையின் பயிற்சி விமானம் டாக்காவில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வங்கதேச தலைநகரான டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் இன்று (ஜூலை 21) வங்கதேச போர் விமானம் மோதியதில் 16 மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். “இன்று மதியம் 1:06 மணிக்கு ஒரு F-7 BGI பயிற்சி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே பள்ளி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது” என்று வங்கதேச பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த 16 மாணவர்கள், விமானி முகமது டூகிர் இஸ்லாம் மற்றும் இரண்டு ஆசிரியர்களும் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விமானம் ஒரு பெரிய சத்தத்துடன் விழுந்து உடனடியாக தீப்பிடித்ததாக அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த உடனேயே தீயணைப்புப் படைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் விமானப் படை ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஏற்றிச் செல்லும் பணிகள் நடந்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

“விமானம் பள்ளியின் வாயிலின் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானபோது பள்ளியின் உள்ளே வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. காயமடைந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியே மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் வேகமாக நடக்கிறது” என்று மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி செய்தித் தொடர்பாளர் ஷா புல்புல் தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "இந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். விமானப் படை, மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மைல்ஸ்டோன் பள்ளி ஊழியர்கள் மற்றும் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுசெய்ய முடியாதது. இது தேசத்துக்கு ஆழ்ந்த வேதனையான தருணம்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x