Published : 21 Jul 2025 02:27 AM
Last Updated : 21 Jul 2025 02:27 AM
புதுடெல்லி: பிரிட்டனில் சாலை விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார்.
சவுதி அரேபியாவின் இளவரசர் காலித் பின் தலால் மகன் அல்வாலீத் பின் காலித் பின் தலால். பிரிட்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்த அல்வாலீத், கடந்த 2005-ம் ஆண்டு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ரியாத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கோமாவிலிருந்து மீளாததால் உறங்கும் இளவரசர் என அவர் அழைக்கப்பட்டார். அவ்வப்போது சிறிய அளவில் அவருடைய உடல் பாகங்கள் செயல்பட்டன. அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் அல்வாலீத்துக்கு சுயநினைவு திரும்பவில்லை. தனது மகனின் உயிரைக் காப்பாற்ற காலித் பின் தலால் எவ்வளவோ முயற்சி செய்தார்.
செயற்கை சுவாசத்தை அகற்ற வேண்டாம் என்றும் இறைவனே தனது மகனின் இறப்பை முடிவு செய்யட்டும் என்றும் அவர் கூறி வந்தார். இந்நிலையில், அல்வாலீத் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அல்வாலீத் தந்தை காலித் பின் தலால் வெளியிட்ட அறிக்கையில், “அல்லாவின் கருணையால் காலமான எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்வாலீத்துக்கு அல்லா இரக்கம் காட்டட்டும்” என கூறியுள்ளார்.
குளோபல் இமாம்கள் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “துயரமான விபத்தில் சிக்கி சுமார் 20 ஆண்டுகள் நீடித்த போராட்டத்துக்குப் பிறகு காலமான இளவரசர் அல்வாலீத் மறைவுக்கு உலகளாவிய இமாம்கள் சார்பில் இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT