Published : 20 Jul 2025 03:43 PM
Last Updated : 20 Jul 2025 03:43 PM
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட மூன்று நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இன்று 6.7 மற்றும் 5 ரிக்டர் அளவிலான தொடர்ச்சியான நிலநடுக்கங்கள் கம்சட்கா மண்டலத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 140 கிமீ தொலைவில் ஏற்பட்டன. இந்த பகுதியில் 180,000 க்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
இந்த நிலநடுக்கங்கள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி கடற்கரையில் அடுத்தடுத்து 32 நிமிடங்களுக்குள் தாக்கின. இதன் பின்னர் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது.
பசுபிக் பெருங்கடலுக்கு அருகே உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி பகுதியானது ஜப்பானின் வடகிழக்கிலும், அமெரிக்க மாநிலமான அலாஸ்காவின் மேற்கிலும் அமைந்துள்ளது. கம்சட்கா தீபகற்பம் பசிபிக் மற்றும் வட அமெரிக்க டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடமாகும், இது ஒரு நில அதிர்வு வெப்ப மண்டலமாக அமைந்துள்ளது. இப்பகுதியில் 1900ம் ஆண்டு முதல் 8.3 ரிக்டருக்கு மேற்பட்ட ஏழு பெரிய நிலநடுக்கங்கள் தாக்கியுள்ளன. நவம்பர் 4, 1952 அன்று, கம்சட்காவில் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT