Published : 18 Jul 2025 08:41 AM
Last Updated : 18 Jul 2025 08:41 AM
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கணுக்கால் பகுதியில் வீக்கம் அதிகரித்ததை தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்த அப்டேட்டை வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இப்போது 79 வயது ஆகிறது. அண்மையில் அவர் பங்கேற்ற நிகழ்வின்போது அவரது கணுக்கால் பகுதியில் வீக்கம் இருந்ததும், கையில் ரத்தக்கட்டு போன்ற காயம் இருந்ததும் கவனத்துக்கு வந்தது. அதை மறைக்கும் வகையில் ஒப்பனை செய்திருந்தார் ட்ரம்ப். இதனால் அவரது உடல்நலன் குறித்த கேள்வி எழுந்தது.
இந்நிலையில், கணுக்கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். வெள்ளை மாளிகையின் மருத்துவ பிரதிநிதிகள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை அவருக்கு மேற்கொண்டனர். அதில் அவருக்கு காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் சிவிஐ (Chronic Venous Insufficiency) எனப்படும் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
பொதுவாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் நரம்பு ரீதியான பாதிப்பு இது என்று வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இதை வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ஊடகங்களுக்கு பகிர்ந்தார். “ரத்த உறைவு, இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற கடுமையான உடல்நல கோளாறு சார்ந்த எந்த அறிகுறியும் அதிபர் ட்ரம்ப்புக்கு இல்லை” என லீவிட் தெரிவித்துள்ளார்.
சிவிஐ: கால்களில் உள்ள நரம்புகள் இதயத்துக்கு ரத்தத்தை சரியாக திரும்பாத காரணத்தால் இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதனால் கால் பகுதி வீக்கம் அடைகிறது. இந்த பாதிப்பு பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆரம்பகட்டத்தில் இதை கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT