Published : 15 Jul 2025 03:28 PM
Last Updated : 15 Jul 2025 03:28 PM
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்காவின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.
ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்தடைந்தது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது.
டிராகன் விண்கலத்தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசாவின் மீட்புக் குழுவினர் 4 விண்வெளி வீரர்களையும் விண்கலத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சுமார் இரண்டு வாரங்கள், 4 வீரர்களும் பல்வேறு மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்த நடைமுறைகளுக்குப் பிறகே ஷுபன்ஷு சுக்லா இந்தியா திரும்புவார்.
#LIVE: SpaceX #Axiom4 ReEntry & Splashdown. #ISRO https://t.co/W9SXzqjMFT
— Dr Jitendra Singh (@DrJitendraSingh) July 15, 2025
முன்னதாக, அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அனுப்பின. இந்த விண்கலத்தில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் சுக்லா உரையாடினார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோவை சேர்ந்த 500 மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார். கடந்த 6-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்கள் தங்கியிருந்தார். அப்போது அவர் சுமார் 60 வகையான ஆய்வுகளை செய்தார். குறிப்பாக நெல், காராமணி, எள், கத்தரி, தக்காளி உள்ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். அந்த விதைகளை அவர் விண்வெளியில் சிறப்பு பெட்டிகளில் வைத்து முளைக்கச் செய்தார். இந்த ஆராய்ச்சியில் இஸ்ரோ, கேரள வேளாண் பல்கலைக்கழகம், ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பாசி பன்றிக்குட்டி என்ற நுண் உயிரியை ஷுபன்ஷு சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இதை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. நுண்நோக்கி உதவியுடன் மட்டுமே பார்க்க முடியும். இந்த நுண் உயிரி விண்வெளியில் எவ்வாறு வளர்கிறது என்பது குறித்தும் சுக்லா ஆய்வு செய்தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இந்த பாசி வகைகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்து அவர் ஆய்வு நடத்தினார்.
மைக்ரோஅல்கா என்ற பாசி வகையையும் சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் சென்றார். இதன் வளர்ச்சி குறித்தும் அவர் செய்தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். இது எதிர்கால விண்வெளி பயணத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இவை உட்பட ஒட்டுமொத்தமாக 60 வகையான ஆராய்ச்சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்வெளியில் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT