Published : 13 Jul 2025 06:09 AM
Last Updated : 13 Jul 2025 06:09 AM
புதுடெல்லி: திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் 1911-ல் ஏற்பட்ட ஜின்ஹை புரட்சிக்குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதையடுத்து, திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்வு செய்வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என தலாய் லாமா தெரிவித்தார்.
இந்நிலையில், திபெத் ஆக் ஷன் நிறுவனம் (டிஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 4 முதல் 6 வயதுக்குட்பட்ட சுமார் 1 லட்சம் குழந்தைகளும் அடங்குவர். ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த இந்தக் குழந்தைகளை பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அழைத்து வந்துள்ளனர். மீதம் உள்ள 9 லட்சம் பேர் 6 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இது மாணவர்களை அடிமைப்படுத்தும் முயற்சி ஆகும். 4,700 ஆண்டுகள் பழமையான திபெத் கலாச்சாரத்தை அழிக்க சீன அதிபர் ஜி ஜின்பிங் முயற்சிக்கிறார்.
இந்த உறைவிடப் பள்ளிகளில் கற்பித்தல் செயல்முறை மிகச்சிறிய வயதிலிருந்தே தொடங்குகிறது. குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் பேசுவதை தடுத்து சீன மொழியில் பேச கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சீன மொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. மேலும் சீனாவின் கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை மட்டுமே இந்த பள்ளிகளில் கற்பிக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத்துவம் பற்றியும் தொடர்ச்சியாக போதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT