Published : 12 Jul 2025 07:07 AM
Last Updated : 12 Jul 2025 07:07 AM
டொரண்டோ: கனடாவின் பிரிட்டஷ் கொல்பியா மாகாணம் சர்ரே நகரில் Kap's Cafe என்ற உணவகம் உள்ளது. இது பஞ்சாபை சேர்ந்த நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உணவகத்தில் வியாழக்கிழமை அதிகாலை 1.50 மணியளவில் மர்ம நபர் ஒருவர் 8 முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு பிறகு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். அதிர்ஷ்வசமாக இதில் எவரும் காயம் அடையவில்லை. மேலும் உணவக கட்டிடத்திலும் அதிக சேதம் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு காலிஸ்தான் தீவிரவாத அமைப்பான பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) உறுப்பினர் ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த இவர் என்ஐஏ-வின் மிகவும் தேடப்படுவோர் பட்டியலில் இருக்கிறார். கபில் சர்மா தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நிஹாங் சீக்கியர்கள் குறித்த கருத்துகளுக்கு லட்டி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து லட்டி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “கபில் சர்மாவின் நகைச்சுவை நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நிஹாங் சீக்கியர்களின் உடை அல்லது நடத்தை குறித்து ஒரு கதாபாத்திரம் கேலி செய்துள்ளது. இதற்கு கபில் சர்மா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாபில் கடந்த ஆண்டு விஎச்பி அமைப்பின் விகாஸ் பிரபாகர் கொலை உட்பட திட்டமிட்ட கொலைகள் மற்றும் கொலை முயற்சிகளுக்கு பின்னால் லட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக லட்டி உள்ளிட்ட பிகேஐ அமைப்பினர் மீது என்ஐஏ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT