Published : 12 Jul 2025 06:49 AM
Last Updated : 12 Jul 2025 06:49 AM
நியூயார்க்: மாணவர்கள், சுற்றுலா பயணிகள் விசா, இந்தியப் பணியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் எச்-1பி விசா கட்டணத்தை ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கட்டணம் ஆண்டுதோறும் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்றும் 2026-ம் ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகிறார். மேலும் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியையும் உயர்த்தி வருகிறார்.
இதனிடையே, கடந்த ஜூலை 4-ம் தேதி ‘ஒரு மிகப்பெரிய அழகிய மசோதா' என்ற மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டு, அதனை சட்டமாக்கி உள்ளார். அதன்படி, தொழில்முனைவோர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான விசா பெறுவதற்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும். பணவீக்கத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தக் கட்டணம் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு இருப்புத் தொகை என்ற பெயரில் இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த இருப்புத் தொகை திரும்ப அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விசா காலாவதியானவுடன் நீட்டிப்பு கோராமல் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படும்.
மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், எச்1பி விசா கட்டணத்தை அவர் கடுமையாக உயர்த்தியுள்ளார். தூதரக விசா பிரிவுகளுக்கு (ஏ மற்றும் ஜி) மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.16 ஆயிரமாக உள்ள இந்தக் கட்டணம் இனி ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்படும்.
சுற்றுலா / வணிகம் (பி-1/பி-2), மாணவர் (எஃப்/எம்), வேலை (எச்-1பி) மற்றும் பரிமாற்ற (ஜே) விசாக்கள் என எல்லா வகையான விசாக்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே உள்ள விசா விண்ணப்பக் கட்டணங்களுடன் சேர்ந்து, விசா வழங்கப்படும் நேரத்தில் இந்தக் கூடுதல் கட்டணத்தையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வசூலிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT