Last Updated : 07 Jul, 2025 07:38 PM

1  

Published : 07 Jul 2025 07:38 PM
Last Updated : 07 Jul 2025 07:38 PM

அமெரிக்காவின் டெக்சாஸ் பெருவெள்ளம்: உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு; 41 பேர் மாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது; காணாமல் போனோரின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 29 அடி வரை உயர்ந்தது. இதனால் கடந்த 5-ம் தேதி டெக்​சாஸ் மாகாணம், ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன.

டெக்சாஸில் வெள்ளப் பாதிப்பு காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 41 பேர் காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போனவர்கள் மற்றும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறினார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும், சவாலான நிலப்பரப்பு, ஆறுகளில் அதிகரிக்கும் வெள்ள்ப்பெருக்கு மற்றும் நீர்நிலைகளில் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் சவால்களுக்கு இடையே மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். ஹெலி​காப்​டர்​கள், ரோந்து படகு​கள் மூலமாகவும் காணா​மல்​ போனவர்​களை தேடும் பணி தீவிர​மாக நடை​பெறுகிறது.

கெர் கவுண்டியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயினர். மீட்புப்பணியின் போது கெர் கவுண்டியில் உள்ள இந்த முகாமில் இருந்து 28 மாணவிகள் உட்பட 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டிராவிஸ், பர்னெட், கெண்டல், டாம் கிரீன் மற்றும் வில்லியம்சன் மாவட்டங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதிகளில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று டெக்சாஸ் பொது பாதுகாப்புத் துறையின் கர்னல் ஃப்ரீமேன் மார்ட்டின் தெரிவித்தார்.

அடுத்த சில நாட்​களுக்கு டெக்​சாஸ் மாகாணத்​தில் கனமழை தொடரும் என்று அமெரிக்க வானிலை மையம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. இதனால் நதி கரையோரம் வசிக்​கும் மக்கள் பாது​காப்​பான இடங்​களுக்கு அப்​புறப்​படுத்​தப்​பட்டு உள்​ளனர்.

இந்த நிலையில், கெர் கவுண்டியில் பேரிடர் அவசரநிலை மேலாண்மை தொடர்பான கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதனையடுத்து டெக்சாஸில் மத்திய அவசரநிலை மேலாண்மை அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் மாகாண பகுதிகளை வரும் வெள்ளிக்கிழமையன்று ட்ரம்ப் பார்வையிடவுள்ளார். அவர் இந்த திடீர் பெருவெள்ளம் குறித்து பேசுகையில், “டெக்சாஸ் மாகாண அரசு மற்றும் நிர்வாகத்துடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம். இது ஒரு பயங்கரமான சம்பவம், முற்றிலும் கொடூரமானது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x