Last Updated : 03 Jul, 2025 06:24 PM

 

Published : 03 Jul 2025 06:24 PM
Last Updated : 03 Jul 2025 06:24 PM

“இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” - கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி.

அக்ரா (கானா): “இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல; அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தினார். நாடாளுமன்ற சபாநாயகர் அல்பன் கிங்ஸ்ஃபோர்ட் சுமனா பாக்பின், இந்த சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி தனது உரையில், “இந்த மதிப்புமிக்க சபையில் உரையாற்றுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஜனநாயகம், கண்ணியம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கானாவில் இருப்பது ஒரு பாக்கியம்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தின் பிரதிநிதியாக, 140 கோடி இந்தியர்களின் நல்லெண்ணத்தையும் வாழ்த்துகளையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ​​தைரியத்துடன் பிரகாசிக்கும், வரலாற்றைத் தாண்டி உயரும், ஒவ்வொரு சவாலையும் கண்ணியத்துடனும் கருணையுடனும் எதிர்கொள்ளும் ஒரு தேசமாக கானா விளங்குகிறது. கானாவின் ஜனநாயக லட்சியங்கள், அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் ஆகியவை முழு ஆப்பிரிக்க கண்டத்துக்கும் உத்வேகத்தை அளித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜனநாயகம் என்பது வெறும் ஓர் அமைப்பு அல்ல. அது நமது அடிப்படை மதிப்புகளின் ஒரு பகுதி. உலகின் பழமையான வேதங்களில் ஒன்றான ரிக் வேதம், ‘எல்லா திசைகளிலிருந்தும் நல்ல எண்ணங்கள் நமக்கு வரட்டும்’ என்று கூறுகிறது. பல்வேறு கருத்துகளை வெளிப்படையான முறையில் நோக்கும் தன்மைதான் ஜனநாயகத்தின் மையக்கரு.

இந்தியாவில் 2,500-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. நான் மீண்டும் சொல்கிறேன். 2,500 அரசியல் கட்சிகள், வெவ்வேறு மாநிலங்களை ஆளும் 20 வெவ்வேறு கட்சிகள், 22 அதிகாரபூர்வ மொழிகள், ஆயிரக்கணக்கான பேச்சு வழக்கு என பன்முகத்தன்மை கொண்ட நாடாக எங்கள் இந்தியா உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மக்கள் எப்போதும் திறந்த மனதுடன் வரவேற்கப்படுவதற்கு இத்தகைய பன்முகத்தன்மையே காரணம். இதே உணர்வு இந்தியர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் இருக்கிறது. கானாவில் கூட, அவர்கள் தேநீரில் சர்க்கரையைப் போல சமூகத்தில் கலந்திருக்கிறார்கள்.

இந்தியா - கானா இடையேயான உறவை ஒரு விரிவான கூட்டாண்மைக்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது. தொழில்நுட்பத்தில் புரட்சி, உலகளாவிய தெற்கின் எழுச்சி, மாறிவரும் மக்கள்தொகை ஆகியவை அதன் வேகத்துக்கும், அளவுக்கும் பங்களிக்கின்றன. முந்தைய நூற்றாண்டுகளில் மனிதகுலம் எதிர்கொண்ட காலனித்துவ ஆட்சி போன்ற சவால்கள் இன்னும் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.

இந்தியாவுக்கும் கானாவுக்கும் பொதுவான ஒரு கனவு உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும் என்பதே அந்த கனவு. ஆப்பிரிக்காவை இந்தியா தனது இதயத்தில் சுமந்து செல்கிறது. இன்றைக்கு மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்கும் ஒரு கூட்டாண்மையை நாம் உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, கானா அதிபர் ஜான் டிராமணி மகாமாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா, கானா இடையே கலாச்சாரம், தரநிலை சான்று, ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம் ஆகியவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. அதன் விவரம்: பிரதமர் மோடிக்கு ‘தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா’ விருது வழங்கல்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x