Published : 03 Jul 2025 08:55 AM
Last Updated : 03 Jul 2025 08:55 AM
அகமதாபாத்: அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு, அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தினார்.
அதன்படி இந்தியர்களையும் அவர் ராணுவ விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பினார். மேலும், அமெரிக்காவில் குடியேறுவதற்கான விசா நடைமுறைகளையும் கடுமையாக்கினார். இதனால் அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 70 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவினால் முதலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
அதன்பிறகு, அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து விட்டார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே வரையில் ஜோ பைடன் அதிபராக இருந்த கால கட்டத்தில் 34,535 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவியிருந்தனர். அந்த எண்ணிக்கை தற்போது ட்ரம்ப் அதிபரான பிறகு 10, 382 ஆக குறைந்துள்ளது.
அவர்களும் உயிரை பணயம் வைத்து அமெரிக்க கனவில் வந்தவர்கள். அவர்களில் 30 பேர் 18 வயதுக்கு குறைவானர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த தகவலை அமெரிக்க குடியேற்ற மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT