Published : 01 Jul 2025 06:22 AM
Last Updated : 01 Jul 2025 06:22 AM
டாக்கா: வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் உள்ளூர் அரசியல்வாதி உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி வழங்கவும், குற்றவாளிகள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குமிலா மாவட்ட காவல் துறை தலைவர் நஸிர் அகமது கான் கூறியதாவது: குமிலா மாவட்டம் முராட்நகரில் நடைபெறும் ஹரி சேவா திருவிழாவை பார்ப்பதற்காக 21 வயது இந்துப் பெண் அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தையுடன் வந்துள்ளார். இவரது கணவர் துபாயில் வேலைபார்த்து வருகிறார்.
கடந்த ஜூன் 26-ம் தேதி ராம்சந்திரபூரைச் சேர்ந்த பெஸோர் அலி (36) என்பவர் அந்த இந்துப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும், அந்தப் பெண்ணை கொடூரமாக தாக்கி நிர்வாணப்படுத்தியதுடன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான பின்பே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, உள்ளூரைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதியான பெஸோர் அலியை போலீஸார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதற்காக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நஸிர் அகமது கான் தெரிவித்தார்.
இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுபான்மை இந்து பெண்ணுக்கு நீதி வழங்க கோரி டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் மிகப்பெரிய பேரணியை நடத்தினர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருந்தது.
நீதிமன்றம் உத்தரவு: இந்து பெண்ணை நிர்வாணமாக்கி கொடூரமாக சித்ரவதை செய்யும் நபரிடம் அந்த பெண் தன்னை விட்டுவிடும்படி மன்றாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, அந்த பதிவை உடனடியாக நீக்க வங்கதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT