Published : 30 Jun 2025 01:02 PM
Last Updated : 30 Jun 2025 01:02 PM
தெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல்லா மகரேம் ஷிராசி பத்வா பிறப்பித்துள்ளார். பத்வா என்பது மத குருக்களால் வழங்கப்படும் மத தீர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. மேலும், “ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மதகுரு அயதுல்லா நாசர் மகரேம் ஷிராசி அரபு மொழியில் வெளியிட்ட பத்வாவில், “இஸ்லாம் மதத்துக்கு தூணாக இருப்பவர்களுக்கு, குறிப்பாக உச்ச தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பது இஸ்லாம் மத அமைப்பில் தடைசெய்யப்பட்டுள்ளது. இஸ்லாம் மத தலைவர்களைப் பாதுகாப்பதும், அத்தகைய அச்சுறுத்தல்களைச் செய்பவர்களை எதிர்கொள்வதும் நமது கடமையாகும், மேலும் இந்த புனிதத்தை மீறுவது மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகும்.
இஸ்லாமிய குடியரசு தலைமையை அச்சுறுத்தியதற்காக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தலைவர்களை வீழ்த்த உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். இந்த எதிரிகளுக்கு முஸ்லிம்கள் அல்லது இஸ்லாமிய அரசுகள் அளிக்கும் எந்தவொரு ஆதரவும் ஹராம் அல்லது தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படும்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இத்தகைய எதிரிகளுக்கும், அவர்களின் வெளிப்படையான குற்றங்களுக்கும் எதிராக உறுதியாக நிற்க வேண்டும். அவர்கள் அத்தகைய செயலைச் செய்தால், கடுமையான மற்றும் தெய்வீக தண்டனையை எதிர்கொள்வார்கள், மேலும் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி பழிவாங்கப்படுவார்கள். இத்தகைய “வெளிப்படையான குற்றங்களுக்கு” பொறுப்பான இவர்களை முஹாரிப் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முஹாரிப் என்பது இஸ்லாமிய சட்டப்படி “கடவுளுக்கு எதிராகப் போர் தொடுப்பவர்” அல்லது “கடவுளுக்கும் அரசுக்கும் எதிராக பகைமை காட்டுபவர்” என்று அழைக்கப்படும் ஒரு வார்த்தை ஆகும். ஈரானில், இந்தப் பெயரில் குறிப்பிடப்படும் குற்றங்களுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT