Published : 30 Jun 2025 06:39 AM
Last Updated : 30 Jun 2025 06:39 AM
வாஷிங்டன்: “காசா விவகாரத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்’’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும், இளம்பெண்கள் உட்பட 251 இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 56,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், அணுஆயுத சர்ச்சை தொடர்பாக ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தற்போது ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காசா தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒரு வாரத்தில் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கான பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈடுபட வேண்டும்.
மேலும், இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் உடனடியாக விடுவித்து போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வரவேண்டும். போர் நிறுத்தம் தொடர்பாக இறுதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT